இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள அன்பு நெஞ்சங்களே!
உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
21ம் நூற்றாண்டிலும் ஒரு தசாப்தம் கடந்துவிட்டது. இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பு மரபு வழியிலிருந்து படிப்படியாக வெளிவந்து இலத்திரனியல் யுகத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ள இவ்வேளையில் எமது சிந்தனையிலும் பதிவுகளிலும் புதிய மாற்றங்களுக்கேற்ப நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவை.
இலங்கையில் தமிழ் இலக்கியமும், இலக்கிய ஆய்வுகள், இலக்கிய படைப்புகள் ஆவணவாக்கப்படல் வேண்டும் என்ற வேண்டுதல்களுக்கு பல இடங்களிலிருந்தும், பல புத்திஜீவிகளினாலும், பல ஆய்வுகளினூடாகவும் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும்கூட, இத்தகைய முயற்சிகளில் எம்மவர்கள் எத்தனை பேர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள் என்பது கேள்விக்குரிய ஒரு விடயமே.
இதனை ஆராய்வதோ, விமர்சிப்பதோ எனது நோக்கமன்று -
ஒரு எழுத்தாளன் என்ற வகையில் எனது சக்திக்கெட்டிய வகையில் என்னால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை மற்றுமொரு கோணத்தில் பதிவாக்கும் நடவடிக்கையாகவே இந்த வலைப்பூவினை நான் ஆரம்பித்துள்ளேன். எதிர்காலத்தில் ஒரு தனியான இணையத்தளமாக இப்பதிவுகளை முன்னெடுத்துச் செல்வேன்.
இலங்கையில் தமிழ் மொழியை வளர்ப்பதிலும், பாதுகாப்பதிலும் தமிழ் எழுத்தாளர்கள்ää கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் விசாலமான பங்களிப்பினை வழங்கியுள்ளனர். இவர்களுள் ஓரிருவர் மாத்திரம் ஆய்வுகளுக்குட்படுத்தப் பட்டாலும்கூட, அதிகமானோர் யார் எவர் என்று யாருக்குமே தெரியாமல் போய்விடுகின்றது.
2002ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் தமிழ்மொழி மூலம் பங்களிப்பு செய்யும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் விபரங்களை விரிவான முறையில் தொகுத்து முதலில் இலங்கையில் முக்கியமானதொரு தேசிய பத்திரிகைகளான 'நவமணி'யிலும், 'ஞாயிறு தினக்குரலி'லும் கட்டுரைகளாக எழுதி அவற்றை ‘இலங்கை எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள்’ பாகம் 01 முதல் பாகம் 10 வரை 10 நூல்களையும், ‘இவர்கள் நம்மவர்கள்’ பாகம் 01 முதல் பாகம் 05 வரை 05 நூல்களுமாக மொத்தம் 15 நூல்களை வெளியிட்டுள்ளேன். இந்த 15 நூல்களிலும் மொத்தம் 350 இலங்கை எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் விபரங்கள் சற்று விரிவான முறையில் பதிவாக்கப்பட்டுள்ளன.
மேலும், 300க்கும் மேற்பட்ட தகவல்களைத் திரட்டி வைத்துள்ளேன். இத்தகைய விபரங்களே இந்த வலைப்பூவில் தொடராக இடம்பெறவுள்ளன.
சமகாலத்தில் வாழக்கூடிய எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் தரவுகள் அடிக்கடி மாறக்கூடியதாகவுள்ளன.
எனவே, ஒரு தனி தளத்தில் இவர்களைப் பதிவாக்கும்போது இடம்பெறக் கூடிய மாற்றங்களையும் சேர்த்துக்கொள்ள முடியும் எனக் கருதுகின்றேன்.
எனவே, வாசக நெஞ்சங்களான நீங்கள் இம்முயற்சி பற்றியும், இதில் இடம்பெறக்கூடிய ஆக்கங்கள் பற்றியும் உங்கள் கருத்துக்களைப் பரிமாரிக் கொள்வீர்களாயின் அதற்கேற்ற வகையில் மாற்றங்களை என்னால் செய்ய முடியுமென கருதுகின்றேன்.
மிக்கநன்றி
உங்கள்
புன்னியாமீன்
உங்கள்
புன்னியாமீன்