வியாழன், 17 நவம்பர், 2011

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் பங்கேற்போர் தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம். போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். 

இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். இப்போட்டியில்
முதல் பரிசாக 200 டாலர்கள்
இரண்டாம் பரிசாக 100 டாலர்கள், 
மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் 

என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25 டாலர் வீதம் இரண்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. 

இவை தவிர தொடர்ச்சியாகப் பங்களிப்போருக்காக 100 டாலர் வீதம் மூன்று சிறப்புப் பரிசுகளும், தமிழர் தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த ஊடகக் கோப்புக்காக 150 டாலர் சிறப்புப் பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.

போட்டி நவம்பர் 15, 2011 முதல் பெப்ரவரி 29, 2012 வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர்
 
என்ற இணைய முகவரிக்குச் சென்று முழு விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். 

போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை tamil.wikipedia@gmail.comtamil.wikipedia@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

- பாலா ஜெயராமன்ஒருங்கிணைப்பாளர், தமிழ் விக்கி ஊடகப் போட்டி

வியாழன், 26 மே, 2011

கவிஞர் பொத்துவில் அஸ்மின்

இலங்கையின் கிழக்கு மாகாணம் பொத்துவிலைச் சேர்ந்த கவிஞர் அஸ்மின் ஈழத்தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் முக்கிய கவிஞராகவும், பாடலாசிரியராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் அறியப்பட்டு வருகின்றார். விடை தேடும் வினாக்கள்(2002) விடியலின் ராகங்கள்(2003)எனும் மகுடத்தில் இதுவரை இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.''ரத்தம் இல்லாத யுத்தம்''(கவிதை), ''ஈழநிலாவின் உணர்வுகள்''(பத்தி எழுத்து) ஆகிய நூல்கள் மிக விரைவில் வெளிவர இருக்கின்றன. சக்தி TVயினால் நடாத்தப்பட்ட'இசை இளவரசர்கள்'போட்டி நிகழ்ச்சி மூலம் பாடலாசிரியராக அறிமுகமான இவர், தேசியமட்ட கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு ''ஜனாதிபதி விருது''(2001),பேராதனை பல்கலைக்கழகத்தின் ''தங்கப் பதக்கம்'' (2003)
சிறந்த பாடலாசிரியருக்கான விருது 2010 உட்பட எட்டு விருதுகளை பெற்றுள்ளார். பேசாத கண்ணும் பேசுமே, காதல் டொட் கொம், கோடம்பாக்கம் ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த கே.செவ்வேளின் தயாரிப்பில் இயக்குனர் கேசவராஜின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ''பனைமரக்காடு'' தமிழ் திரைப்படத்தில் பாடல்களை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில்  நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில்  22. 5. 2011 அன்று கவிக்கோ அப்துல்ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்டு பார்வையாளர்களதும்,  பேராளர்களினதும், அதிதிகளதும் பாராட்டினை பெற்ற கவிதை.

கவிஞர் பொத்துவில் அஸ்மின்.
  
இறைவாழ்த்து

உலகக் கவியரங்கில் உயர்வாய் கவிபடைக்க
அழகுக் கவிதருவாய் ஆண்டவனே!-நபியருளால்
கோலாலம் பூரில் கூடிநிற்கும் சான்றோர் முன்
வீழாத செந்தமிழை தா.

தமிழ் வாழ்த்து

அண்ணல் நபியிடத்தில் ஆழ்கடல்போல் இருந்திட்ட
கன்னல் குணத்தில் சிறுதுளியை சிந்தவந்தேன் -இன்னுமேன்
மறைவாக இருக்கின்றாய் மணித்தமிழே? அவன்துணையால்
விரைவாக என்முன்னே வா.!

அவையடக்கம்.

நெற்பதர்நான் எனைக்கவிதை
நெய்துபடி என்றார்கள்
கற்கண்டு சொற்கொண்டு
கவிபாடும் புலவர்முன்
முட்புதர்நான் முஹம்மதெனும்
முழுநிலவை பாடுவதா..?

அற்பன்நான் கற்பனையில்
ஆழ்ந்தபடி யோசித்தேன்.
விக்கித்தேன் எனக்குள்ளே
விடைகேட்டு வினாத்தொடுத்தேன்…
துக்கித்தேன் பலநாட்கள்
துயரத்தில் உயிர்துடித்தேன்.

கத்தியிலே நடக்கின்ற
காலம்தனை மறந்துவிட்டு
புத்தியினை உலகத்தின்
புதைகுழிக்குள் செலுத்தியதால்
நித்திரையை தொலைத்துவிட்டு
நித்தம்நான் தவித்திருந்தேன்.

அல்லாஹ்வை நேசித்தால்
அண்ணலினை சுவாசித்தால்
பொல்லாத கோடையிலும்
பொசுக்கென்று மழைவருமே…
எனவே நான் சிந்தித்தேன்
என்னைநான் நிந்தித்தேன்

வல்லோனை தொழுது ஒரு
வழிசொல்லு என்றழுதேன்….
பொறுமையாய் இருந்தேன்
பொங்கியது சங்கத்தேன்….!-இங்கே
தங்கத்தேன் கொட்டுவோர் முன்-இதை
தந்துநான் தப்பித்தேன்…!!

கவியரங்கத் தலைவருக்கு.

தேமாங்காய் பூமாங்காய் ஒரு மண்ணும் விளங்காமல்
தெம்மாங்காய் பாடுகிறேன் பாட்டு-கவிக்கோவே!
நான்பாடும் பாட்டை நானறியேன் பெருங்கவியே
கூனுண்டோ ஆயந்துநீர் கூறும்.

கிறுக்கும் கவியெல்லாம் கீழென்று வளர்கவியை
நறுக்கி பின்னவரே நாறுகின்றார்-திருக்கவியே!
நொறுக்கி என்நெஞ்சில் நோக்காடு தந்தோர்முன்
சருகல்ல இவனென்று சாற்றும்

அழகுத்தமிழ் கவியின் ஆற்றலினை உணராதோர்
மிளகாய் போல்மரபை நினைக்கின்றார்-விலகாமல்
பழகும் தமிழ்மொழியில் மரபுத்தாய் மாண்புகளை
உலகுக்கு சொல்வேன் உணர்ந்து.

அண்ணலாரின் அழகிய குணங்கள்
பொறுமை.

வாவியை கடப்ப தென்றால்
வள்ளமொன் றிருந்தால் போதும்..
ஓவியம் வரைவ தற்கு
ஓரிரு வரைகள் போதும்
ஆவியை ஆட்சி செய்யும்
அரசரை  மக்கள் நெஞ்சை
கூவியே விழிக்கச் செய்த
குயிலினை குறைஷிப்பூவை
காவியம் பாடு தற்கு
காலம்நாள் போதாதெனவே…
தீவினை ஓடச் செய்து
தீனினை ஒளிரச் செய்ய
நோவினை பொறுத்த எங்கள்
‘கோ’வினை நபிகள் என்னும்;
பூவினை பற்றித்தான்யான்
பாவினை ஏந்தி வந்தேன்..
மேவிய தகைமை மிக்க
மேதைகாள் வளருமெந்தன்
பாவிலே குறைகள் காணிண்
பாவியை மன்னியுங்கள்.
காவியாய் இருந்த நெஞ்சை
கவிதை போல் வெண்மையாக்கி
சாவியாய் தொழுகை தந்த
சத்திய புருஷர் நாமம்
நாவினால் நவின்றால் கூட
நரம்பெலாம் கலிமாச்; சொல்லும்.
லாயிலாஹ இல்லல்லாஹ்
முஹம்மதுர் ரஸலுல்லாஹ்
எல்லாப் புகழும் உருவில்லா
இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்!!
      
* (வேறு)
சிறுமையாய் இருந்த எம்மை
சீர்பெற செய்த செம்மல்
எருமையாய் நடந்த எம்முள்
ஏகனை நுழைத்த ஏந்தல்
கருமையாய் இருந்த உலகை
வெண்மையாய் செய்த வேந்தர்
வறுமையாய் வாழ்ந்த போதும்
வள்ளலாய் இருந்த அண்ணல்
மறுமையில் எமக்காய் பேசும்
மாநபி சுவனத் தென்றல்.
பெருமையாய் வாழாதந்த
பொறுமையின் சிகரம் பற்றி
அருமையாய் கவிதை சொல்வேன்
பொறுமையாய் இருந்து கேட்பீர்..!!

எண்சீர் விருத்தம்.

நெறிகெட்ட காபிர்கள் மக்காவெங்கும்
நெருப்போடு இணைவைத்து வணங்கும்வேளை
தறிகெட்டோர் வெறிகொண்டு கஃபாவெங்கும்
தங்கத்தால் சிலைவைத்து களிக்கும்வேளை
புரியாத மாந்தர்கள் நபிகள் நெஞ்சை
புண்ணாக்கி பழியுரைகள் கூறும் வேளை
அறியாமை இருள்விலக இஸ்லாம் மார்க்கம்
அண்ணலார் பொறுமையினால் தளைக்கலாச்சு!

கருணைமிகு எம்பெருமான் மக்கா நகரில்
காலாற அவ்வேளை நடந்து வந்தார்.
தெருவழியே ஒருகிழவி தலையில் மூட்டை
சுமந்தபடி முனகலுடன் முன்னே வந்தாள்.
கிறுகிறுப்பு தரும்வெயிலில் நடந்துவந்த
கிழவியவள் நிலைகண்டு முன்னே சென்ற
திருநபியோ ‘என்தாயே உங்கள் சுமையை
நான்தலையில் சுமக்கின்றேன் தருவீர’; என்றார்;

‘இல்லைநான் தொலைதூரம் செல்லவேண்டும்
வீண்சிரமம் உமக்கெதற்கு’ விலகுமென்றாள்.
வெள்ளைமனம் உள்ள நபி அவளைப் பார்த்து
வெகுதூரம் சென்றாலும் வருவே னுங்கள்
பிள்ளைபோல் எனை எண்ணி தருவீரென்று
    பிரியமுடன் அவளிடத்தில் கேட்டுநின்றார்
சுள்ளென்ற வெயில்பொழுதில் நபிகள் தலையில்
    சுமைஏற்றி அவள்பின்னே நடக்கலானாள்…!

‘தள்ளாடும் இவ்வயதில் நீங்க ளுங்கள்
    தாய்மண்ணை விட்டுஏன் போகின்றீர்கள்..
பிள்ளைகள் உள்ளனரா அங்கு?’ என்;று
    தொலைதூரம் சென்றநபி வினவலானார்.

‘பொல்லாத ஒருகொடியோன் எங்கள் முன்னோர்
   வணங்கிவரும் தெய்வமெலாம் பொய்என்கின்றான்
‘அல்லாஹ்’வை வணங்கட்டாம் என்று சொல்லி
   ஆத்திரத்தை கிளப்பு கிறான் அதனால் போறேன்’


‘கல்லெடுத்து அவன் தலையை உடைக்கும் சக்தி
   கடுகளவும் எனக்கில்லை அதனால் போறேன்.
கொள்ளையிலே போகட்டும் ‘முஹம்மத்’ என்னை
   கொன்றாலும் அவன்பேச்சை கேட்கமாட்டேன்.
எல்லோரும் அவன் வழியில் போனால் கூட
   ஒருபோதும் அவன்வழியில் போகமாட்டேன்.
நில்லேன்நான்  அவனில்லா ஊரை நோக்கி
    நிம்மதியை தேடித்தான்; போறேன் என்றாள்.’

வறுமைப்பூ தன்வாழ்வில் பூத்தபோதும்
    வயிற்றினிலே கல்சுமந்து நின்றமன்னர்.
பொறுமையினை எளிமையினை நேர்மைதன்னை
    பொக்கிஷமாய் வைத்திருக்கும் எங்கள்தூதர்.

அருமைநபி ‘அல்லாஹ்’வின் அருளினாலே
    அருங்குணங்கள் அத்தனையும் கொண்ட அண்ணல்.
சிறுமையுடன் அவள்சொன்ன பேச்சை கேட்டு
   சிறிதளவும் கோபமின்றி தொடர்ந்து சென்றார்.

கேவலமாய் ஒருவர் எமை கேலிசெய்தால்
  கேட்டிருந்து ரசிப்போமா உடனேபேசும்
நாவறுத்து அவர்கையில் கொடுத்துவிட்டு
   நம்சக்தி என்னவென்று காட்டுவோமா?
சாபமிட்ட கிழவியவள் சுமையைத் தூக்கி
   சாந்திநபி சாந்தமுடன் செல்லுகின்றார்.
கோபமென்ற சொல்கூட அறியா தந்த
   கோமகனின் பொறுமையினை என்னவென்பேன்.

செல்லுமிடம் சேர்ந்ததனால் தலையின் சுமையை
   வள்ளல்மனம் உள்ளநபி இறக்கி வைத்து
‘நல்லபடி வந்துவிட்டோம் மகிழ்ச்சி ‘உம்மா’
   நான்சென்று வருகின்றேன்’ என்றார் பணிவாய்.
‘எல்லையற்ற பேரன்பு உள்ளம் கொண்ட
   பிள்ளைநீர் யாரென்று’ கிழவி கேட்டாள்.
அல்லல்தரும் கொடியவனாய்  நீங்கள் சொன்ன
   பொல்லாத நபிமுஹம்மது நான்தான் என்றார்.


சங்கைமிக்க நபிபெருமான் வார்த்தை கேட்டு
கங்கைபோல் நீர்பெருக அழுதமாது
தங்கமனம் படைத்;தவரே! நபியே உம்மை
தவறாகப் பேசியதை மன்னியுங்கள்.
உங்களது பொறுமையினால் இஸ்லாம் மார்க்கம்
உலகமெலாம் பரவுமிது உண்மையென்று
அங்கமெல்லாம் நடுநடுங்க ஈமான் கொண்டு
அண்ணலார் கரம்பற்றி கலிமா சொன்னார்.

(வேறு)

‘ஹாத்தமுன்’ நபியின் பொறுமையை பற்றி
கவிதை படிப்பேனா.-இல்லை
கருணைநபி பட்ட கஷ்டங்கள் பற்றி
கண்ணீர் வடிப்பேனா..?

தொழுதிடும் நபியினில்; அழுகிய குடலை
தூக்கிப்; போட்டார்கள்-நபியோ
அழுதவர் நிலையை மாற்றிட இறையிடம்
‘துஆக்கள்’ கேட்டார்கள்.

நபியினைப்பார்த்து பைத்தியமென்று
கைகொட்டி சிரித்தார்கள்-நபியோ
மனிதனாய் அவர்கள் மாறிட இறையிடம்
கைகளை விரித்தார்கள்.

அண்ணலின் தோழர்கள் நெஞ்சிலே எதிரிகள்
அம்பினை தொடுத்தார்கள்-நபியோ
உண்ண வழியின்றி வந்த எதிரிக்கு
உணவும் கொடுத்தார்கள்.

‘அபுலஹப்’ உட்பட ‘குறைஷிகள’; அனைவரும்
கல்லை எறிந்தார்கள்-நபியோ
குறைஷிகள் உட்பட அடிமை யிடத்திலும்
அன்பை சொரிந்தர்கள்.

பாதையில் காபிர்கள் பதுங்கி இருந்து
பாய்ந்து அடித்தார்கள்-நபியோ
போதையில் ஆடிடும் அவர்நிலை மாறிட
தினமும் துடித்தார்கள்.

சு10னியக்காரன் ‘முஹம்மது’ என்று
பெண்களும் பழித்தார்கள்-நபியோ
பெண்களை உயிருடன் புதைக்கின்ற கொடிய
பேதமை ஒழித்தார்கள்.

இறைவன் ஒன்றென சொன்ன தற்காக
இழிவாய் நினைத்தார்கள்-நபியோ
இன்னல் தந்திட்ட எதிரியை மார்புடன்
இழுத்து அணைத்தார்கள்.

கட்டிய கடவுள்கள் பொய்யென சொன்னதும்
எட்டி உதைத்தார்கள்;-நபியோ
வெட்டி எறிந்திட வந்தவரிடமும்
சென்று கதைத்தார்கள்.

கோத்திரச் சண்டையில் மூழ்கியோர் பள்ளியில்
மூத்திர மடித்தார்கள்-நபியோ
ஆத்திரம் கொண்டு அடித்து விடாதவர்
மனதை படித்தார்கள்.

‘கலிமா’ச்சொன்ன ‘ஸஹாபிகள்’ தலையினை
கொய்து முடித்தார்கள்-நபியோ
கொய்தவர் கொண்டு  இறையருள் பணிகளை
செய்து முடித்தார்கள்.

நபியவர் தலையினில் நாளும்பெண்கள்
குப்பையை போட்டார்கள்-நபியோ
மனபிறழ்வாக  நடந்திட்ட அவருக்கு
மருந்தினை போட்டார்கள்.

கொடுத்த வாக்கை மறந்துவிட்டு
கொட்ட மடித்தார்கள்-நபியோ
உண்மை என்ற கொடியை நாளும்
உயர்த்திப் பிடித்தார்கள்.

சத்திய தூதர் நபியிடம் கூட
சந்தேகப் பட்டார்கள்.-நபியோ
சற்றும் தளர்வின்றி பொறுப் பதிலேதான்
சந்தோசப் பட்டார்கள்.

கயவர்கள் கதைகளை சிறுவர்கள் கேட்டு
கற்களை எறிந்தார்கள்-நபியோ
சின்னஞ் சிறுசுகள் செயல்களை கண்டு
புன்னகை  புரிந்தார்கள்.

எதிரிகள்கூடி மாநபி தோழர்கள்
நெஞ்சை பிளந்தார்கள-;நபியோ
நஞ்சைக் கலந்திட வந்தவர் நெஞ்சிலும்
அன்பைக் கலந்தார்கள்.

நிலவு முகத்தில் எச்சிலை துப்பி
நிம்மதி கண்டார்கள்-நபியோ
சேவகம் செய்யும் மனிதர்களோடும்
சேர்ந்தே உண்டார்கள்.

ஆண்டவன் ஒருவன் என்பவர் குரல்வளை
அறுத்திடச் சொன்னார்கள்.-நபியோ
கொடுமை கண்டு கொதித்திட்ட ‘உமரிடம்’
பொறுத்திடச் சொன்னார்கள்.

பரிவுள்ள நபிதலை கொய்திடின் அவருக்கு
பரிசுண்டு என்றார்கள்.-நபியோ
உண்மையை அன்பினை நெஞ்சினில் பற்றியே
உலகத்தை வென்றார்கள்.

பாவிகள் அனுதினம் பழியுரை கூறியே
பல்லிiனை உடைத்தார்கள்.-நபியோ
சத்திய வேதத்தை உலகெலாம் பரப்பி
சரித்திரம் படைத்தார்கள்.

பகைவர்கள் நண்பராய் பாங்குடன் நடித்து
பழியினை தீர்த்தார்கள்.-நபியோ
அநீதிகள் செய்த ‘அபூசுபியானையும்’
அணியிலே சேர்த்தார்கள்.

அவதூறென்னும் சேற்றினை நபியிடம்
அள்ளி எறிந்தார்கள்.-நபியோ
கீழ்தரமாக மக்கள்; நினைப்பதை
கிள்ளி எறிந்தார்கள்.

தாயிப் நகரின் வீதியில் அவரை
தாக்கி மிதித்தார்கள்.-நபியோ
தனக்குஏசிய தாயவள் சுமையை
தூக்கி மதித்தார்கள.

பிடரி சிவந்து நோகுமளவுக்கு
பிடித்து இழுத்தார்கள்.-நபியோ
அழுக்கு படிந்து கிடந்த மனதை
அன்பால் வெளுத்தார்கள்.

நபியவர் கொள்கையின் உண்மை அறிந்தும்
நாளும் மறுத்தார்கள்-நபியோ
நாளை யொருநாள் விடிந் திடுமென்று
யாவும் பொறுத்தார்கள்.

பொறுமையின் சிகரம் நபிதா னென்று
சொல்லி முடிப்பேனா.-இங்கு
இன்னும் அவர்துயர் சொல்லிடப்போனால்
அழுதிடும் என்பேனா…!!

திங்கள், 7 மார்ச், 2011

அமரர் கனகசபை சிவகுருநாதன்

இலங்கையில் வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டத்தில் புலோப்பளையினைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் கனகசபை சிவகுருநாதன் ‘கசின்’ எனும் பெயரால் நன்கு அறியப்பட்ட பல்துறை எழுத்தாளரும், சமூக சேவையாளருமாவார்.  1920ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி புலோப்பளையில் கனகசபை சேதுப்பிள்ளை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த இவர் க.வன்னியசிங்கம், பெ.நாகமுத்து, வ.சரஸ்வதி, பா. அன்னலட்சுமி ஆகியோரின் சகோதரராவார். சிவகுருநாதன் அவர்கள் தனது ஆரம்ப, இடைநிலைக் கல்வியினை உசன் இராமநாதன் கல்லூரி, அச்சுவேலி மத்திய மகாவித்தியாலயம், சாவக்கச்சேரி இந்துக் கல்லூரி ஆகியவற்றில் பெற்றார். 1940 ஆம் ஆண்டு திருநெல்வேலி ஆசிரியர் கலா சாலையில் ஆசிரியர் பயிற்சிக்காக சேர்ந்தார். அங்கு பண்டித மணி, சி.கணபதிப் பிள்ளை அவர்களின் வழிகாட்டலில் தமிழை நன்கு கற்றறிந்து 1943ஆம் ஆண்டு ஆசிரியராக வெளியேறி வவுனியாவில் கடமையாற்றினார்.

1950ஆம் ஆண்டில் பண்டிதர் பரீட்சை எழுதி அதில் சித்தியடைந்தார். அதன் பின்னர் செட்டிக்குளம், மன்னார், மத்துகம, கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் ஆசிரியப் பணி தொடர்ந்தது. அப்பகுதிகளில் அவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் இன்று உயர் பதவிகளில் இருப்பது அவரது சேவைக்கு எடுத்துக் காட்டாகும். 1971ஆம் ஆண்டு தொடக்கம் 1978ஆம் ஆண்டு சேவையிலிருந்து இளைப்பாறும்வரை உடுத்துறை மகாவித்தியா லயத்தின் அதிபராகக் கடமையாற்றினார். அக்காலப் பகுதியில் உடுத்துறை மகாவித்தியாலயம் பரீட்சைகளில் நல்ல பெறுபேற்றைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
‘கசின்’ சிவகுருநாதன் அவர்கள் சமூகப்பணி, இலக்கியப்பணி எனப் பல்வேறு துறைகளில் எமது சமூகத்திற்கு தொண்டாற்றினார். சாவகச்சேரி, சரசாலையில் வசிக்கும்போது இராமாவில் பிள்ளையார் கோவில் திருப்பணி, மட்டுவில் அம்மன் கோவில் திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் வாழ்ந்த “நிதானபுரி” இல்லம் என்றும் அவ்வூர் மக்களால் நிறைந்து இருக்கும். இவரது சோதிடப் புலமையே இதற்குக் காரணமாகும். எதுவித பலனையும் எதிர்பாராது இல்லம் வரும் சகலருக்கும் விவாகப் பொருத்தம், பலன் சொல்வார். அந்தப் பணி பிற்காலத் தில் பம்பலப்பிட்டி அரச தொடர்மாடியில் வாழ்ந்த போதும் தொடர்ந்தது.

அதிபர் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் தொண்ணூறுகளில் சில வருடங்கள் மன்னார் கேதீஸ்வரக் கோவலில் நிர்வாகப் பொறுப்பை ஏற்று திறன்பட நடத்தினார். இலங்கை இராணுவம் திருக்கேதீஸ்வரத்தை முற்றுகையிட்டபோது கோயிலில் கடமை புரிந்த ஊழியர்கள் எல்லோரும் வெளியேறி விட்ட நிலையில் கோவிலைப் பூட்டி இறுதியாக அங்கிருந்து வெளியேறியவர் சிவகுருநாதன் ஆவார். இறுதிக் காலத்தில் பம்பலப்பிட்டியில் வாழ்ந்தபோது கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அங்கு பால பண்டித வகுப்புகளில் இலவசமாக விரிவுரையாற்றினார். அவ்வகுப்புகளில் அரச சேவையில் பணியாற்றிய பலர் மாணவர்களாக விளங்கினார்கள். 1963ஆம் ஆண்டு கொழும்பில் கடமையாற்றியபோது இலங்கை கலை இலக்கிய பேரவையின் தலைவராக விளங்கினார். இவர் தலைவராக இருந்தபோது இலக்கியப் பேரவை பல இலக்கிய விழாக்களையும் இலக்கியக் கலந்துரையாடல்களையும் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
 
“கசின்” சிவகுருநாதனுடைய வாழ்க்கையில் அவர் ஆற்றிய ஆக்க இலக்கியப் பணி மிக உயர்ந்த இடத்தை வகிக்கின்றது. இவர் 1946ஆம் ஆண்டில் இலக்கியத்துறையில் காலடியெடுத்து வைத்துள்ளார். இவரின் கன்னியாக்கத்தை ஈழகேசரி பிரசுரித்துள்ளது. ஈழகேசரி உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
“கசின்” எனும் புனைப்பெயரில் முன்னைய இலக்கியத் தலை முறையினருக்கு நன்கு அறிமுகமான சிவகுருநாதன் ஆரம்ப காலங்களில் ஈழத்தில் அனைத்து பத்திரிகைகளிலும் நூற்றுக்கணக்கான ஆக்கங்களை எழுதியுள்ளார். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என முத்துறையிலும் “கசின்” அகலமாகவும், ஆழமாகவும் பாதம் பதித்திருந்தார்.
 
பண்டிதமணி கலாநிதி சி. கனபதிப்பிள்ளை அவர்களை என்றும் நினைவுகூர்ந்து வந்த இவரின் எழுத்துக்களில் பண்டித மணியின் சாயல்களை காணக்கூடியதாக இருக்கும்.  நகைச் சுவையுடன் எழுதி வந்த இவர் ஆனந்த விகடன் ஆசிரியர் தேவன் அவர்களை ஆக்க, இலக்கிய கர்த்தா என்ற வகையில் மானசீகமாக நேசித்து வந்தார்.
 
“கசின்” முதலில் ஒரு கட்டுரை ஆசிரியராகவே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார். இலக்கியம் என்றால் என்ன?, தமிழ் ஆசிரியர் வரலாறு, பாட்டியின் ஆராய்ச்சி ஆகிய கட்டுரைகள் ஈழகேசரியில் வெளிவந்த நேரத்தில் இவருக்குப் பெரும் வரவேற்பினை பெற்றுக் கொடுத்துள்ளன. பின்னர் நாவலாசிரியராகவும், சிறுகதையாசிரியராகவும் பரிணமித்த போதிலும்கூட, இவர் கட்டுரைகள் எழுதுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. இலக்கியம் தொடர்பாகவும், கல்வியியல் தொடர்பாகவும் பல கட்;டுரைகளை இவர் எழுதியுள்ளார். அக்கால கட்டத்தில் கல்வி வெள்ளை அறிக்கை பற்றி சிந்தாமணியில் இவர் எழுதிய கட்டுரை கல்விமான்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றது. ஆய்வுக் கட்டுரைகளை “சட்டம்பியார்” என்ற புனைப் பெயரில் எழுதுவதை இவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

1947ஆம் ஆண்டில் கசினின் முதலாவது ஆக்க இலக்கியமான “வண்டியில் வளர்ந்த கதை” தொடர் நாவலாக ஈழகேசரியில் பிரசுரமானது. அந்நாவலில் அவர் கையாண்ட உத்தி காலத்தின் புதுமையானதாக சித்திரிக்கப்பட்டது. புகையிரதத்தில் சந்திக்கும் இருவர் ஒருவரை ஒருவர் அறிய முடியாமல் காதல் கடிதங்களை பத்திரிகை மூலம் பரிமாறிக் கொள்கின்றனர். கடிதம் மூலம் நாவலை வளர்த்து செல்வது ஒரு புதிய பரிணா மமாக இருந்தது.
 
இவர் பிற்காலத்தில் எழுதிய நாவல்களிலும் கடிதங்கள் மூலம் கதையை வளர்த்து செல்கின்ற பாணி நிறையவே காணப்பட்டதை அவதானிக்க முடிகின்றது. சகட யோகம், இராசமணிச் சகோதரிகள், இதய ஊற்று, தேடிவந்த செல்வம், கற்பகம், நிதானபுரி, சொந்தக்காரன், கண்டெடுத்த கடிதங்கள் என பல நாவல்களை இவர் எழுதியுள்ளார். இதன் மூலமாக ஈழத்து இலக்கியவானில் இவர் தனியிடம் பிடித்திருந்தார்.

நாவல் இலக்கியத்தைப் போலவே சிறுகதை இலக்கியத்திலும் இவர் புதுமைகளை சாதித்துள்ளார். மணியோசை, நூலும் நூற்கயிறும், இது காதலல்ல, பச்சைக் கிளி, பஞ்சும், நெருப்பும், சிலந்திவளை, தமிழன்தான், வனசஞ்சாரம், குந்து மாணிக்கம் என்பன இவரின் சிறுகதைகளுள் சிலவாகும். ஈழத் தமிழர்களின் பழக்க வழக்கங்கள், பேச்சுமுறை போன்றவற்றை இவரின் சிறுகதைகளில் நிறையவே காணமுடிந்தது. மண்வாசனை ததும்ப எழுதுவதில் “கசின்” தனித்துவமிக்கவராக விளங்கினார். நேர்மையான போக்கும், விசால உள்ளமும், நடுநிலைக் கொள்கையும் உடையவர்களிடமிருந்து தான் சிறந்த இலக்கியங்கள் தோன்ற முடியும்’ என்ற கருத்தில் “கசின்” பிடிவாதமாக இருந்தார். இலங்கையின் அனைத்து தேசிய பத்திரிகைகளிலும் போல இவரின் ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரது இலக்கியச் சேவையைப் பாராட்டி 1994ஆம் ஆண்டு இலக்கியப் பேரவை யாழ் மண்ணில் விழா எடுத்து மூத்த எழுத்தாளரான இவரைக் கௌரவித்தது. இவரது தமிழ்ப் புலமையைப் பாராட்டி கொழும்பு தமிழ்ச்சங்கம் 1999ஆம் ஆண்டு நடாத்திய புலவர், வித்துவான்கள் மாநாட்டில் இவருக்கு ``இயற்றமிழ் வித்தகர்’’ என பட்டமளித்து கௌரவித்தது. 2000ஆம் ஆண்டு இவரது இலக்கியப் பணிக்காக இலங்கை அரச கலாசாரத் திணைக்களம் ``கலாபூசணம்’’ விருது வழங்கி கௌரவித்தது.

1944ஆம் ஆண்டு சரசாலை கணக்கர் கனகசபை செல்லம்மா தம்பதியினரின் மகளான இராசம்மாவை கரம்பிடித்து இல்லற வாழ்க்கையில் பிரவேசித்த இவருக்கு ஐந்து பிள்ளைகள் உளர். அவர்களில் மூவர் ஆண்பிள்ளைகள். இருவர் பெண்பிள்ளைகள். மூத்த மகள் புஷ்பராணி. மூத்த மகன் புஷ்பநாதன். அடுத்த பிள்ளைகள் செல்வராணி, சபாநாதன், கேதீஸ்வரநாதன் ஆகியோராவர்.
 
2003ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 13ஆம் திகதி இவர் எம்மைவிட்டு பிரிந்தாலும் இவரின் சமூக மற்றும் இலக்கிய சேவைகள் எம்மைவிட்டுப் பிரியாது. இவரின் பல படைப்புகள் நூலுருப் பெறாமல் இருக்கின்றன என அறிய முடிகின்றது. இருப்பினும் இவரது நூலுருவான சில படைப்புகளின் விபரம் வருமாறு:

நிதானபுரி
கசின் எழுதிய நான்கு குறுநாவல்களின் தொகுதி இதுவாகும். இத் தொகுதியில் நிதானபுரி, கற்பகம், சொந்தக்கால், தேடிவந்த செல்வம் ஆகிய  நான்கு குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுதியின் முதற்பதிப்பு 1995ம் ஆண்டு டிசம்பரில் கொழும்பு சிற்றிசன் பிரின்டர்ஸ்ஸில் அச்சிடப்பட்டு சீ.சபாநாதன் அவர்களினால் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் 150 பக்கங்களைக் கொண்டது. 

காதலும் கடிதமும்.
இந்நூலில் வண்டியில் வளர்ந்த கதை, கண்டெடுத்த கடிதங்கள் ஆகிய இரண்டு கதைகள் பிரசுரமாகியுள்ளன. இவ்விரு கதைகளும் முறையே ஈழகேசரி, வீரகேசரியில் பிரசுரமானவையாகும். இத்தொகுதியின் முதற்பதிப்பு 1995ம் ஆண்டில் கொழும்பு சிற்றிசன் பிரின்டர்ஸ்ஸில் அச்சிடப்பட்டு சீ.சபாநாதன் அவர்களினால் வெளியிடப்பட்டது.

கசின் சிறுகதைகள்.
இந்நூல் யாழ். இலக்கியவட்டம் வெளியிடாக 1999 ஏப்ரல் மாதம் முதலாம் பதிப்பு வெளிவந்தது. இந்நூலினை பொ. ஆனந்த லிங்கம் என்பவர் தொகுத்திருந்தார். இந்நூலின் விலை 125 ரூபாவாகும். இந்நூலில் கசின் அவர்களினால் எழுதப்பட்ட 15 சிறுகதைகள் சேர்க்கப்பட்டுள்ளன.150 பக்கங்களைக் கொண்ட இத்தொகுதிக்கு கலாநிதி க. குணராசா அணிந்துரை வழங்கியிருந்தார். 

குமாரி இரஞ்சிதம்.
இந்நூல் கல்ஹின்னை தமிழ் மன்றத்தின் 95வது வெளியிடாக  முதற்பதிப்பு 2000ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வெளிவந்தது. இது ஒரு நாவலாகும்.

சகடயோகம்.
இந்நூல் பம்பலப்பிட்டி சந்ரா வெளியீடாக முதற்பதிப்பு 2001ம் ஆண்டு ஜுன் மாதம்  வெளிவந்தது. இதுவும் ஒரு நாவலாகும்.    

கசின் நினைவலைகள். 
இந்நூல் கசின் அவர்களின்  வாழ்க்கைச் சுவடும் இலக்கியப் பதிவும்கொண்டதாக அமைந்துள்ளது. இந்நூலை பொ. ஆனந்தலிங்கம் தொகுத்துள்ளார். 

வெள்ளி, 4 மார்ச், 2011

சக்தி. அ. பாலஐயா

இலங்கையில் மத்திய மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மூத்த கவிஞர், நலிவுற்ற மக்களின் ஏக்கத்துக்காக அரைநூற்றாண்டுக்கும் மேலாக வீச்சுமிக்க தமது எழுத்துக்களாலும், வீராந்த பேச்சுக்களாலும் சிறந்த பணியாற்றி வருபவர். கைதேர்ந்த ஓவியர். பல்கலைகளிலும் ஆற்றல் வாய்ந்த கலைஞராவார். கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் போதனாசிரியராகப் பணிபுரிந்து சிற்பம், சித்திரம், வண்ண வேலைகள் தொடர்பான துறைகளில் பல கலைஞர்களை உருவாக்கியவர். மும்மொழி வல்லுனர். சிறந்த மொழிபெயர்ப்பாளர் என பல்துறையிலும் புகழுக்குரிய சக்தி. அ. பாலஐயா இன்று நோய்வாய்ப் பட்ட நிலையில் இருந்தாலும் மலையக மக்கள் எழுச்சிக்கு பாடுபட்டவர்.

இலங்கையில் மத்திய மலையகத்தில் விஸ்வநாதர், இலக்குமி அம்மை தம்பதியினரின் புதல்வராக 1925ஆம் ஆண்டு ஜுலை 26 ஆந் திகதி நுவரெலியா மாவட்டத்தில் பிறந்தபால ஐயா தனது பத்தாவது வயதிலேயே ‘பாரதியின் தாக்கம்’ என்னும் தலைப்பில் தனது முதல் கவிதையை எழுதினார். காந்தி பக்தராகவும் கதராடை அணிபவராகவும், இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்ட தலைவர்களின் ஆற்றல், பெருமை, தியாகம் ஆகியவை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் மிக்கவராகவும் அந்தப் பத்து வயதிலேயே இவர் இருந்திருக்கின்றார் என்பது ஆச்சரியத்தைத் தருகின்றது.

பத்து வயதிலேயே பாட்டெழுதத் தொடங்கினாலும் அதை அவர் ஏனோ தொடரவில்லை. ஓர் ஓவியராகவே தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வந்தார். ஆனாலும், இவருக்குள்ளே ஒரு கவிஞன் உருவாகிக் கொண்டே இருந்தான்.

படிப்பை முடித்துக் கொண்ட சக்தி ஓர்  ஓவியராகவே தனது வாழ்வைத் தொடங்கினார். ஒரு Commercial Artist  ஆகத் தொழிலை மேற்கொண்ட இவர் ஒரு சில நூல்களுக்கும், சஞ்சிகைகளுக்கும் அட்டைப் பட ஓவியங்கள் வரைந்துள்ளார். வீரகேசரியின் ஆசிரியர் திரு. லோகநாதனின் சிறுகதைத் தொகுதி – சீ.வி. நடத்திய ‘கதை’ என்னும் சஞ்சிகை போன்றவைகளை சில உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இலங்கை அரசின் நுண்கலைக் கல்லூரியில் 1943 – 1944 ஆம் ஆண்டுகளில் கலை ஆசிரியராக பயிற்சி பெற்ற இவர், ஆங்கிலக்கலை ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும், ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் அரசாங்கக் கலைக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் 1951வரை பணிபுரிந்துள்ளார்.

‘Ceylon Teachers College’  மற்றும் ‘Hay Wood’s College Of Fine Arts’ ஆகிய கலைக் கூடங்களில் ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றிய சக்தியின் ஓவியக் கண்காட்சிகள் கொழும்பிலும் பிற இடங்களிலும் 1948 – 49 ஆம் ஆண்டுகளில் பிரசித்தம் பெற்றன. காலப்போக்கில் இவரது சிந்தனைகள் கவிதைக்கு வித்திட்டன. 1949க்குப் பின் வீராவேசம் கொண்ட இவருடைய கவிதைகளும், கட்டுரை இத்தியாதி எழுத்துக்களும் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், ஈழநாடு போன்ற ஏடுகளில் அடிக்கடி பிரசுரம் பெற்றன. கல்கி மற்றும் சி. என். அண்ணாத்துரை அவர்களின் திராவிட நாடு போன்ற தமிழக ஏடுகளிலும் சக்தியின் எழுத்துக்கள் இடம்பெற்றன.

ஓவியக் கலைஞர்கள் பற்றிய வரலாற்று கட்டுரைகளை யும்ää ஓவியங்கள் கூறும் தத்துவங்கள் பற்றியும் விரிவாக பத்திரிகைகளில் எழுதியுள்ளார். வீரகேசரி பத்திரிகையில் துணை ஆசிரியராகவும் ‘தமிழ் ஒலி’யின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவரது சொந்த பத்திரிகையான “வளர்ச்சி” யில் 1956ம் ஆண்டில் எழுதிய எழுச்சிமிகு கட்டுரைகளை தமிழகத்தில் ‘திராவிட நாடு’ மறுபிரசுரஞ் செய்துள்ளது.

சமூக மறுமலர்ச்சி இயக்கம் என்பதன் ஒரு துணை விளைவாகவே ஆரம்பகால மலையக இலக்கியங்கள் தோன்றியிருக்கின்றன என்னும் உண்மை மலையக இலக்கியம் பற்றிய ஆரம்பத் தேடல்களில் ஈடுபட்டுள்ள அனைவருமே உணர்ந்துவரும் ஒரு முக்கியமான விடயமாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலக் கோப்பித் தோட்டக் குடியேற்றத்திலிருந்து, பிந்திய தேயிலைத் தோட்டக் குடியேற்றக் காலத்திலிருந்தும் இத்தென்னிந்திய மக்கள், மலையகத் தொழிலாளர்கள் பட்டதுன்ப துயரங்களும் அனுபவித்த வேதனைகளும், பட்டாளத்துக் கட்டுப்பாடுகள் போன்ற வெள்ளைக்காரர்களின் இராணுவ அடக்கு முறைகளும் எழுத்திலடங்காதவைகள்.

தங்களின் சக்தி உணராமல், உழைப்பின் பயன் உணராமல் சோர்ந்தும் சோம்பியும் கிடந்த இவர்களைத் தட்டி எழுப்புவதையே குறிக்கோளாகக் கொண்டதாய்க் கிளம்பியதே மலையக இலக்கியம். இவ்வெழுத்து முயற்சிகளின் முன்னோடிகளாக விளங்கும் கோ. நடேசய்யர், சி.வி. வேலுப்பிள்ளை, கே. கணேஷ், சக்தி பாலையா போன்றவர்கள் சமகாலத்தவர்கள். இவர்களுடைய சிந்தனைகளும் ஒன்றாகவே இருந்திருக்கின்றன. இந்த மக்களின் விழிப்பு, விடிவு, சுதந்திரச் சமத்துவம் ஆகியவைகளே இவர்களுடைய எழுத்துப் பணிகளின் முனைப்பான அம்சங்களாக இருந்தன. ‘நடேசய்யரின் சாதனைகள்’ என்று நிறைய விஷயங்களை தனது கட்டுரைகள் மூலம் வெளியிட்டவர் மக்கள் கவிஞர் சி.வி.

சி. வி. க்கு பரவலான அறிமுகத்தினையும் ஏகோபித்த புகழையும் கொடுத்த ‘In Ceylons Tea Gardens’  எனும் ஆங்கிலக் கவிதை நூலை ‘தேயிலைத் தோட்டத்திலே’ என்று தமிழாக்கித் தந்தவர் கவிஞர் சக்தி .அ. பாலையா. இந்தத் தமிழாக்கம் வீரகேசரியில் தொடராகப் பிரசுரிக்கப்பட்டது. பிறகு செய்தி ரா.மு. நாகலிங்கம் அவர்களால் செய்தி பதிப்பகம் மூலம் நூலாக வெளியிடப்பட்டது. (ஆங்கில மூலம் 1954- மொழி பெயர்ப்பு 1969)

 ‘கவிஞர் சி.வி. வேலுப்பிள்ளை அவர்களின் கவிதைத் தொகுதியைத் தமிழாக்கும்போது கவிஞரவர்களின் உள்ளத்தையும் உணர்வையும், ஏழ்மையில் வாடும் மலையத் தொழிலாளர்களின் பால் அவர் கொண்டிருக்கும் பாசமும் பரிவும் அலைத்திரல்களாக எனது சிந்தனைகளைத் தழுவித் தொடர்ந்தன....

கவிஞரின் ஆங்கிலக் கவிதைகளைத் தமிழ்க் கவிதையாக்கும்போது அவரது மூலக் கருத்துணர்வில் கலந்திட விழைந்திருக்கின்றேன். கருத்தாழம் வழுவாதிருந்திடக் கவிஞரின் கவிதைகளில் ஊடுருவும் மலையக மக்களின் உணர்வாம் கருப் பொருளைத் தழுவியே தமிழ்க் கவிதைகளை தந்திட முயன்றிருக்கின்றேன்….|| என்று இந்த நூலுக்கான முன்னுரையில் சக்தி குறிப்பிட்டிருந்தாh.;

 1963ல் தினகரனின்  கலை மண்டலம் பகுதியில் ‘மேல் நாட்டு ஓவியர்கள்’ என்னும் தலைப்பில் பல ஆக்கங்களைப் படைத்துள்ளார். அதே காலகட்டத்தில் சுதந்திரனில்  மலை நாட்டு அறிஞர்கள்  என்னும் தலைப்பில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.


 சக்தி பாலையா, தனிவழிக் கவிராயர், மலையரசன், லக்ஷ்மி ஆகிய புனைப் பெயர்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. இவர் தமிழ் ஒளி (1954) வளர்ச்சி (1956) ஆகிய சஞ்சிகைகளையும் வெளியிட்டுள்ளார். 1956ன் அரசியல் கெடுபிடிகள் பற்றி நாம் அறிந்ததே. சிங்களம் மட்டும் சட்டத்தின் மூலம் தமிழுரிமை  பறிக்கப்பட்டு சிங்களப் பேரினவாதம் முனைப்புப் பெற்ற காலம் அது. அரசின் பேரினவாதத்திற் கெதிராகவும் அரசியல்வாதிக ளையும்ää சிங்களத் தலைவர்களையும் நேர்மையான வழியில் நடக்கும் படியும் அறிவுறுத்துவதற்காக வென்றே சக்தி பாலையா அவர்கள் இந்தப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். ‘வளர்ச்சி’ பத்திரிகையின் அன்றைய ஆசிரியத் தலையங்கங்கள் மிகவும் காத்திரமானதாகவும்ää காரசாரமானதாகவும் இருந்தன. அவற்றின் முக்கியம் கருதி அறிஞர் அண்ணாவின் “திராவிட நாடு” இத்தலையங்கங்களை மீள் பிரசுரம் செய்து வந்தது.

1948ல் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தகையுடன் மலையக மக்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து மலையகத் தலைவர்கள் நடத்திய சக்தியாக்கிரகத்தில் சக்தீயும் கலந்துகொண்டார்.

1956ன் சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து 1957ல் தமிழ்த் தலைவர்கள் நடத்திய எதிர்ப்புக் கூட்டங்களிலும் இவர் கலந்து கொண்டார். ‘மனோதத்துவமும் கலையும், போதனா முறையும்’ என்னும் பயிற்சி நூலினை 1952ஆம் ஆண்டு வெளியிட்டார்.

 ‘சொந்த நாட்டினிலே’ என்னும் தேசியப் பாடல்கள் அடங்கிய நூலினை மொழியுரிமைக்காக 1956ல் வெளியிட்டார். வீரகேசரியின் துணை ஆசிரியராகச் சில காலமும் சி.வி.யின் “மாவலி” சஞ்சிகையின் இணை ஆசிரியராகச் சிலகாலமும் பணிபுரிந்துள்ளார். 1960களின் ஆரம்பத்தில் ‘இந்திய வம்சாவழிப் பேரவை’ என்னும் அமைப்பினைத் தொடங்கி மலையக மக்களின் நிலைமைகளை இந்திய இலங்கை அரசினர்களுக்கு அறிவிப் பதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்கான விடிவுகளைத் தேட ஒரு வழி சமைத்தார்.

1981ல் பஸ்ஸிலிருந்து விழுந்து ஒரு கோர விபத்துக்குள்ளானார் சக்தீ. அது பற்றி அவர் கூறுகையில், அவரது மன உறுதியும், வாழ்வின் மீதான அவரது திடமான நம்பிக்கையும், திண்மையும் புலனாகிறது.

    ‘நான் பஸ்ஸினடியில் கிடக்கின்றேன். நான் கிடப்பது பஸ் சாரதிக்குத் தெரியாது. இடது காலின் மேல் பஸ்ஸின் பின் சில்லு ஏறியபோது கால் எலும்புகள் கரகரவென நொறுங்கும் மெல்லிய ஓசை எனக்குத் தெளிவாகக் கேட்டது. சில்லு படிப்படியாக எனது முழங்கால், தொடை என்று ஏறி கத்த முடியவில்லை. சத்தம் வர மறுக்கிறது. அப்போது தான் யேசுநாதரின் கிருபையால் அது நடந்தது. யாரோ எனது நெஞ்சுக்குள் புகுந்து தொண்டை வழியாக வெளியேறி கத்து, கத்து என சத்தமிட்டார்கள். கத்தினேன். பஸ்ஸின் சில்லு அசையாமல் நின்றுவிட்டது. என்னை எப்படி வெளியே எடுத்தார்கள் என்ன செய்தார்கள். ஒன்றுமே தெரியவில்லை. ஆஸ்பத்திரியில் கிடந்தேன்.

    மாதக்கணக்கில் மருத்துவமனைக் கட்டில் பிறகு இரண்டு கால்களையும் முழங்காலுடன் வெட்டினால் தான் உயிர் பிழைப்பேன் என்றார்கள் டாக்டர்கள். இரண்டு கால்களையும் இழந்த பிறகு நான் எப்படி வாழ்வது. பிடிவாதமாக மறுத்து விட்டேன். மரணத்துடன் வருடக்கணக்கில் போராடி பலவிதமான சுய வைத்தியங்கள் செய்தேன்.

    பிறகு மெதுவாக ஊன்று கோல்களுடன் எழுந்து நடமாடினேன் என்று கூறும் சக்தீ இப்போது ஊன்றுகோலினையும் வீசி எறிந்துவிட்டு மிகவும் சாதாரணமாக எதுவுமே நடவாதது போல் மீண்டும் தனது வேலைகள், இலக்கியக் கூட்டங்கள் என்று உலாவருகின்றார்.
      இவரது கலை இலக்கியப் பணிகளுக்காக அரசாங்கம் கவிச்சுடர் பட்டமளித்துக் கௌரவித்தது (1987). தமிழ் ஒளிபட்டமும் விருதும் 1993ல் வழங்கப்பட்டது.  இலங்கை கம்பன் கழகம் 1998ஆம் ஆண்டு “மூதறிஞர்”; விருதளித்தது. கலாசார அமைச்சு ~~கலாபூஷணம்|| விருதும் வழங்கி இவரை கௌரவித்துள்ளது.

      தேசிய அருங்கலைச்சபை மற்றும் அரசின் மலையகக் கலாசார மேம்பாட்டுக்குழு ஆகியவற்றின் அங்கத்தவராக இருந்து கவிஞர் சக்தீ பணியாற்றி வருகின்றார். இவர் இதுவரை எழுதியுள்ள நூல்களாவன

•    மனோதத்துவமும் கலையும் போதனா முறையும் 1952
•    சொந்த நாட்டிலே – தேசிய கீத நூல் 1956
தேயிலைத் தோட்டத்திலே – மொழிபெயர்ப்புக் கவிதை நூல் 1969
•    சக்தீ பாலஐயா கவிதைகள் - துரை வெளியீடு 1998


இவருடைய முகவரி:-

SAKKTHIE BALA – IAH,
64 – 1/20, DAM STREET,
COLOMBO - 12

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

டாக்டர் ஞானசேகரன்

மேல் மாகாணம்,  கொழும்பு மாவட்டம்,  வெள்ளவத்தை கிராமசேவகர் பிரிவில் வசித்துவரும் டாக்டர் ஞானசேகரன் அவர்கள் நாடறிந்த ஒரு எழுத்தாளரும், சஞ்சிகையாசிரியருமாவார்.

1941ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி தியாகராசா ஐயர் - வாலாம்பிகை தம்பதியினரின் புதல்வராக யாழ்ப்பாண மண்ணில் பிறந்த இவர், புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ் பாடசாலை, உரும்பராய் இந்துக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தற்போது ஒரு டாக்டராக பணியாற்றி வருகின்றார். இவரின் அன்புப் பாரியார் ஞானலட்சுமி. இவர் இளைப்பாரிய ஆசிரியை. இத்தம்பதியினருக்கு இராஜேஸ்வரன்,  வசுந்தரா,  பாலசந்திரன் ஆகிய அன்புச் செல்வங்களுளர்.

இவரது இளம் வயது முதல் இவர் ஓர் இலக்கியச் சூழலில் வளர்ந்தவர். தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய வித்துவசிரோமணி சி. கணேசையர் இவரின் பூட்டனார். நல்லூரில் ஆதினம் அமைத்து தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றிய சுவாமி நாதர் தம்பிரான் சுவாமிகள் இவரது தாய் மாமா. இவர்களைவிட இவரது உறவினர் பலர் பழந்தமிழ் இலக்கியங்களில் பரிச்சயம் உள்ளவர்களாக இருந்தனர். எந்தவொரு சம்பவத்தையும் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து எடுத்துக் காட்டுக்களுடன் விளக்கி இலக்கியச் சுவையுடன் பேசவல்ல பலர் இவரின் உறவினர்களாக இருந்தனர். இவர்களின் சிலர் கோவில்களில் புராண படனங்களுக்குப் பயன் சொல்வதில் வல்லமை பெற்றிருந்தனர்.

இதன் காரணமாக இவருக்கு இளம் வயதிலே பழந் தமிழ் இலக்கியங்களில் பரிச்சயம் ஏற்பட்டது. பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே இவரது தாயார் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்துள்ளார். அக்கால கட்டங்களில் கல்கி, ஆனந்தவிகடன், கலைமகள் போன்ற சஞ்சிகைகளை வாசிக்கத் தொடங்கிய இவர், கல்கி,  அகிலன், சாண்டில்யன்,  ஜெயகாந்தன், மு.வ.,  புதுமைப்பித்தன் ஆகியோரின் படைப்புகளை ஆர்வத்துடன் வாசித்து வந்தார். இதனால் இவர்களைப் போல தானும் கதைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு இளம் வயதிலேயே ஏற்பட்டது.

இந்தியாவிலிருந்து  கண்ணன் என்ற சிறுவர்களுக்கான சஞ்சிகையொன்று அக்காலகட்டத்தில் வெளிவந்து கொண்டிருந்தது. பள்ளிப் பராயத்தில் அச்சஞ்சிகைக்கு சிறு துணுக்குகள், வாசகர் கடிதங்கள் போன்றவற்றை அடிக்கடி எழுதி வந்தார். இவை பிரசுரமானதும் இவருள் எழுத வேண்டும் என்ற உத்வேகம் மேலும் மேலும் அதிகரித்தது.

இந்த அடிப்படையில் 1964ஆம் ஆண்டில் கலைச்செல்வி எனும் சஞ்சிகையில் பிழைப்பு எனும் தலைப்பில் இவரது முதலாவது சிறுகதை பிரசுரமானது. தொடர்ந்து பல சிறுகதைகளை இலங்கையில் வெளிவந்து கொண்டிருந்த வாரப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதினார். இந்தியாவிலிருந்து வெளிவரும் தரம் வாய்ந்த தமிழிலக்கிய சஞ்சிகையான கலைமகளிலும் இவரின் சில கதைகள் பிரசுரமாகியுள்ளன. இதுவரை 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள்,  கட்டுரைகள்,  நூலாய்வுகள் என இவர் எழுதியுள்ளார். டாக்டர் ஞானசேகரன் அவர்கள் இதுவரை ஒன்பது நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 

01.    காலதரிசனம்
1973ல் வெளியானது. 12 சிறுகதைகள் அடங்கிய இச்சிறுகதைத் தொகுதிக்கு பேராசிரியர் க. கைலாசபதி முன்னுரை எழுதியிருந்தார். இம்முன்னுரையில் பேராசிரியர் நூலாசிரியர் தி. ஞானசேகரன் அவர்களைப் பற்றி குறிப்பிடும்பொழுது,  மன விகசிப்பும், கலைமெருகும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் வளர்ச்சிபெற்ற சிறுதை ஆசிரியர் என்றார். (15.04.1973)

02.    புதிய சுவடுகள்
1977ல் எழுதிய முதல் நாவல் வெளியாகியது. வீரகேசரி அக்காலத்தில் ஒரு நாவல் போட்டியை நடத்தியது, அதற்கென எழுதப்பட்டதே இந்த நாவல். பின்னர் இந்நாவல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது. இந்நாவல் அந்த ஆண்டுக்கான அரச சாகித்திய விருதினைப் பெற்றது. இந்நாவல் பற்றி பேராசிரியர் சு. வித்தியானந்தன்  ஆழமான சமுதாயப் பார்வையில் வீசி நிற்கும் இவரது நாவல் சுபிட்சமும், செழுமையும் நிறைந்த புதியதொரு காலத்தை தருசித்து நிற்கின்றது (06.03.1978) என்றும், பேராசிரியர் க. அருணாசலம்  யாழ்ப்பாண மண்ணுக்கே சிறப்பாகவுரிய பிரச்சினையொன்றினை அதற்குரிய காரணிகளை அறிவுபூர்வமாக அணுகி உணர்ச்சிபூர்வமாக திட்டமிட்ட கதையும், சத்துடன் புதிய சுவடுகள் நாவல் படைக்கப் பட்டுள்ளது. சமுதாயத்தின் ஊழல்களையும், போலித் தனங்களையும்,  மாறிவரும் கருத்தோட்டங்களையும் இந்நாவல் சித்தரிக்கின்றது (15.03.1980) என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

03.    குருதிமலை
1979ல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது. அவ்வாண்டுக்கான சாகித்திய விருதினைப் பெற்றது. இதுவொரு மலையக நாவல். தான் மலையகத்தில் வைத்திய அதிகாரியாகத் தொழில் புரிந்ததால் அங்கு பெற்ற அனுபவம் இந்த நாவலை எழுதத் தூண்டியுள்ளது. இந்நாவல் தகவம் பரிசினையும் பெற்றுக் கொண்டது. 1986ல் ஈழத்தில் அதுவரை வெளிவந்த ஆக்க இலக்கியங்களில் நாவல் சார்ந்த சிறந்த நூல்களில் ஒன்றென இலங்கை இலக்கியப் பேரவையின் சான்றிதழையும்  பெற்றது. இந்நாவல் பற்றி கலாநிதி நா. சுப்பிரமணியம் 1988 மல்லிகை இதழில் பின்வருமாறு எழுதியிருந்தார்.  கதைசொல்லும் முறையிலும், தொழிலாளருது பண்பாட்டுக் கோலங்களைக் காட்டும் முறையிலும் ஞானசேகரன் அவர்களது ஆற்றல் விதந்து பாராட்டத்தக்கது. இதுவொரு இலக்கியம் என்ற வகையில் மட்டுமன்றி மலையக மக்களின் ஒரு காலகட்ட வரலாற்று ஆவணம் எனத்தக்க தகுதியும் பெற்றுள்ளது. பேரினவாதத்திற்குப் பணியாத தமிழுணர்வின் முதற்கட்ட வெற்றிற்கு கட்டியம் கூறிநிற்கும் படைப்பு இது எனலாம்

மதுரை அமெரிக்கன் கல்லூரி விரிவுரையாளர் செ. போத்திரெட்டி குருதிமலை என் உள்ளத்தை பிணித்த உன்னத படைப்பு. அந்நாவலை அக்கரைத் தமிழ் எனும் முதுகலைத் தாள் ஒன்றிற்கு பாடநூலாக வைக்க முடிவு செய்துள்ளோம். என்றார். இந்த அடிப்படையில் 1992ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.ஏ. பட்டப் படிப்பிற்குப் பாடநூலாகத் தெரிவுசெய்யப்பட்டது. இந்நாவல் 3 பதிப்புக்களைப் பெற்றுள்ளது. மேலும்,  இந்நாவல் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு சிங்கள வாசகர்கள் மத்தியிலும் எழுத்தாளரை அறிமுகம் செய்து வைத்துள்ளது. 

04.    லயத்துச்சிறைகள் - (குறுநாவல்) 
லயத்துச்சிறைகள் 1994ல் வெளிவந்தது. மலையக நாவல். 1995ல் சிறந்த நாவலுக்கான மத்திய மாகாண கலாசார அமைச்சின் சாகித்திய மண்டலப்பரிசு பெற்றது. இலங்கை இலக்கியப் பேரவை யின் சிறந்த நாவலுக்கான சான்றிதழையும் பெற்றுள்ளது.

இந்நூல் பற்றி பேராசிரியர் எஸ். தில்லைநாதன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “மலையக மக்கள் தங்களது எதிர்கால வாழ்க்கைக்குத் தயார் செய்துகொள்ள,  தமது சொந்தக் காலிலே நிற்கவேண்டுமென்ற நிதர்சன உண்மையை இந்த ‘லயத்துச் சிறைகள் நாவல் வெளிப் படுத்துகின்றது. தோட்டப் பிரதேசத்திலேயே வாழ்ந்து அவர்களது யதார்த்தங்களை மிகத் தெளிவாக அறிந்தா இந்த நாவலை படைத்திருக்கிறார் நூலாசிரியர்? அவரது படைப்பாற்றல் பாராட்டுக்குரியது என்றார்.

05.    கவ்வாத்து – குறுநாவல்
(1996) தேசிய கலையிலக்கியப் பேரவையும், சுபமங்களாவும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசுபெற்றது. ‘விபவி கலாசார மையத்தின் 1996ல் வெளிவந்த சிறந்த படைப்பிற்கான ‘தங்கச்சங்கு விருதும், சான்றிதழும் பெற்றது. மத்திய மாகாண சாகித்திய விருதினையும் பெற்றது.

இந்நூல் பற்றி பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “திரு. ஞானசேகரனின் இந்தக் குறுநாவல், மலையகப் பெருந்தோட்ட தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினையை நோக்குகிறது. அது தொழிற்சங்கங்களின் பயன்பாடு என்பதாகும். எந்தத் தொழிற்சங்க இயக்கம் அவர்களின் சமூக – பொருளாதாரத் தனித்துவங்களை உணர்ந்த அவர்களின் “நல்வாழ்க்கைக்குப் போராடிற்றோ,  இன்று அதே அந்த மக்களின் ஒற்றுமையின்மைக்கு வழிவகுக்கும் சமூகக் கருவியாக மாறியுள்ள நிலைமையை இந்தக் குறு நாவலிலே காண்கிறோம். மலையகப் பெருந்தோட்டத் தமிழர்களை எதிர்நோக்கி நிற்கும் (இன்றைய) மிகப் பெரிய சவால் இது… இந்தப் பிரச்சினையின் ஒரு வெட்டுமுகத்தை ஒரு வன்மையான முனைப்புடன் இந்தப் படைப்புத் தருகின்றது என்றார்.

இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குறுநாவல்களுள் 1995ஆம் ஆண்டு தமிழக சுபமங்கள சஞ்சிகை நடத்திய ஈழத்து குறுநாவல் போட்டியில் பரிசும், பாராட்டும் பெற்ற கதையொன்று இடம்பெற்றுள்ளது.

06.    அல்சேசனும் ஒரு பூனைக் குட்டியும்
அல்சேசனும் ஒரு பூனைக் குட்டியும் (1998) (சிறுகதைத் தொகுதி). தற்போது இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் B.A வகுப்பிற்குரிய பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் பற்றி பேராசிரியர் க. அருணாசலம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “திரு. ஞானசேகரன் அவர்கள் கதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி உருவ அமைதியிலும் தீவிர கவனம் செலுத்தியுள்ளமையை அநேகமாக எல்லாக் கதைகளிலும் காணமுடிகிறது. உள்ளடக்கங்களுக்கேற்ற மிகப் பொருத்தமான தலைப்புகள், உயிர்த்துடிப்புமிக்க நடை மிகப்பொருத்தமான கதைத் திருப்பங்கள், சிந்தனையைத் தூண்டும் முடிவுகள்,  பண்புநலனை வெளிப்படுத்தும் பாத்திர வார்ப்புகள், உவமைப் பிரயோகங்கள், கச்சிதமான வருணனைகள் முதலிய அவரது கதைகளுக்குத் தனிச்சோபையை அளிக்கின்றன என்றார்.

07.    தி. ஞானசேகரன் சிறுகதைகள். 30 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 2005ல் வெளியானது. 2005ம் ஆண்டில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிக்கான நாவேன்தன் விருதினைப் பெற்றது.

08.    புரிதலும் பகிர்தலும் (2003) அவுஸ்திரேலிய எழுத்தாளர்களுடனான நேர்காணல் 09.    அவுஸ்திரேலியப் பயணக்கதை (2002) பயண இலக்கிய தொகுதி.

டாக்டர் ஞானசேகரன் அவர்களின் எழுத்துகள் பலவழிகளிலும் முத்திரைப் பதித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இவரது கதைகள் சமூகமயமானவை. சமூக யதார்த்தங்களை வெளிப்படுத்தக்கூடியவை. அத்துடன்,  பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய வகையில் கருத்துக்களை கதை வடிவிலே முன்வைத்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும். 

ஞானம் சஞ்சிகை

டாக்டர் ஞானசேகரன் அவர்களின் இலக்கியப் பணிகளில் 2000ஆம் ஆண்டுக்குப் பின்பு உச்சமாகத் திகழ்வது  ஞானம் சஞ்சிகை என்றால் மிகையாகாது. பகிர்தலின் மூலம் விரிவும், ஆழமும் பெறுவது ‘ஞானம் எனும் பணிக்கூற்றுடன் தொடர்ந்து மாதந்தோறும் வெளிவரும் ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் டாக்டர் ஞானசேகரன் அவர்கள். அதன் இணையாசிரியர்: ஞானம் ஞானசேகரன்.

ஞானத்தின் முதலாவது இதழ் 2000.06.06இல் வெளிவந்தது. ஒரு சஞ்சிகையானது அந்த நாட்டின் இலக்கியப் பாரம்பரியங்கள்,  இலக்கிய உலகில் ஏற்படும் மாற்றங்கள்,  வளர்ச்சிப் போக்குகள்,  கருத்தோட்டங்கள் போன்றவற்றின் காலக் கண்ணாடியாக திகழ வேண்டும். புதிய எழுத்தாளர்கள் தோன்றி வளர வேண்டும். இக்கருத்தியலுக்கமையவே ஞானம் சஞ்சிகையின் உள்ளடக்கங்களிலும்,  செயற்பாடுகளிலும் கவனம் செலத்தி வருவது அவதானிக்க முடிகின்றது. எமது நாட்டில் சென்ற நூற்றாண்டு 60, 70கள் இலக்கிய செயற்பாடுகளில் உன்னத காலமாக விளங்கியது. முற்போக்கிலக்கியம், நற்போக்கிலக்கியம், மரபு பற்றிய சர்ச்சைகள் முன்னெடுக்கப்பட்ட காலம் அது. அக்காலகட்டத்தில் தோன்றிய சிற்றிதழ்கள் - மறுமலர்ச்சி,  கலைச்செல்வி,  மல்லிகை,  குமரன்,  இளம்பிறை,  சிரித்திரன்,  விவேகி, மரகதம், தேன் அருவி,  மலர்,  மலைமுரசு,  நதி,  அலை,  தீர்த்தக்களை,  அஞ்சலி, நந்தலாலா போன்றவையும் வேறும் சிலவும் இலக்கியப் பணி புரிந்தன.
   
எண்பதுகளில் தோன்றிய போர்ச்சூழல் காரணமாக எமது படைப்பாளிகள் பலர் நாட்டைவிட்டும் புலம்பெயர்ந்தனர். மேலும் பலர் நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தனர். வாழ்க்கைப் பிரச்சினைகள் பலவாயின. சுதந்திரமாக இயங்க முடியாத சங்கடம். இவை யாவும் எமது படைப்பாளிகளின் படைப்புச் செயற்பாட்டில் ஆர்வம் குறைந்த நிலைமையை தோற்றுவித்தன. வாசிப்புப் பழக்கம் இளைய தலைமுறையிடம் அருகத் தொடங்கிற்று.

ஆனாலும்,  இலக்கியச் செயற்பாடுகள் காலத்துக்குக் காலம் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியது அவசியமானது. இன்று மிகவும் சிரமமான ஒரு சூழ்நிலையிலேயே நாம் இப்பணி யில் ஈடுபட்டுள்ளோம். முன்னைய இலக்கிய சஞ்சிகைகள் ஆற்றிய இலக்கியப் பணியின் தொடர்ச்சியைப் பேணி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம் என்ற உணர்வுடன் செயல்படுவது இன்றியமையாத தேவையாகின்றது. அந்த உணர்வுடனே நாம் செயல்பட்டு வருகின்றோம் என டாக்டர் ஞானசேகரன் அவர்கள் ஞானம் 100வது இதழில் குறிப்பிட்டிருந்தார்.

உண்மையிலேயே தற்போதைய காலசூழ்நிலையை பின்னணியாகக் கொண்டு நோக்குமிடத்து ஒரு இலக்கிய சஞ்சிகையை தொடர்ச்சியாக வெளியிடுவதில் உள்ள சிரமம் அனைவரும் அறிந்ததே. மாதந்தோறும் தவறாமல் ஞானம் சஞ்சிகையை வெளியிடுவதினூடாக ஞானசேகரன் ஒரு புதிய சாதனையைப் படைத்து வருகின்றார் என்றால் மிகையாகாது.

டாக்டர் ஞானசேகரன் அவர்களின் புகைப்படத்தை தனது முகப்பட்டையில் பிரசுரித்து 1998 அக்டோபர் கொழுந்து சஞ்சிகை கௌரவத்தை வழங்கியது. அதேபோல 1998 ஏப்ரல் அட்டைப்பட அதிதியாக மல்லிகை சஞ்சிகையும் இவரை கௌரவித்தது. இலக்கியத்தில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தாலும் கர்வமின்றி பழகுவதற்கு இனிமையான சுபாவமுள்ள இவரின் முகவரி:-

தி. ஞானசேகரன்
3-பி,  46ஆவது ஒழுங்கை
வெள்ளவத்தை
கொழும்பு – 06






திங்கள், 31 ஜனவரி, 2011

முருகர் செல்லையா

வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டம், உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் அல்வாய் ஜே - 378 கிராமசேவகர் வசத்தில் நிரந்தரமாக வசித்து வந்த முருகர் செல்லையா ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு முதுபெரும் புலவராக விளங்கியவர். இயல்பாக கவி பாடக்கூடிய ஆற்றல்மிக்க  இவர், எழுத்துருவிலும் பல படைப்புகளை முன்வைத்துள்ளார். 1966ஆம் ஆண்டு டிசம்பர் 09ஆந் திகதி தனது 60வது வயதில் இவர் அமரத்துவமடைந்த போதிலும்கூட இவரின் தமிழ்ச் சேவைகளும்,  இலக்கியச் சேவைகளும் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

1906 ஆம் ஆண்டில் ஒக்டோபர் மாதம் 07ஆந் திகதி முருகர், குஞ்சரம் தம்பதியினரின் புதல்வராக அல்வாயில் பிறந்தவரே செல்லையா. இவர் யாழ்ப்பாணம், தேவரையாழி சைவ வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்று பின் பலாலி ஆசிரியர்  பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற ஒரு தமிழ் ஆசானாவார். இவரின் தமிழ்மொழிப் போதனையால் யாழ் மண்ணில் பல நூற்றுக்கணக்கான சாதனைப்படைத்த நல்மாணாக்களை உருவாக்கினார். இவர்களுள் சிலர் இன்றும் சாதனையாளர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். ஆர்ப்பாட்டமில்லாமல் மிக அமைதியா கவும், தெளிவாகவும் போதிக்கும் கருத்துக்களை மாணாக்களின் மனங்களில் பதிய வைப்பதில் இவரின் திறமை தனித்துவமானது என்று அவர்களின் மாணாக்கள் கூறும்போது செல்லையாவின் கற்பித்தல் ஆற்றலை எடைபோடக்கூடியதாக இருக்கின்றது.

இவரின் கற்பித்தல் பாங்கில் இலக்கிய நயம் மிகைத்திருக்கும். கவி நயம் மிகைத்திருக்கும். எந்தவொரு போதனையையும் எதுகை மோனையுடன் போதிக்கும் பாங்கு இவரின் சிறப்பம்சமாகும். இலக்கிய ரீதியில் கவிஞர் செல்லையா அனுசுயா, அமுதன், முருகபூபதி ஆகிய பெயர்களில் எழுதி வந்த இவரின் அன்புப் பாரியார் செ. நாகமுத்து. இத்தம்பதியினருக்கு செ. விவேகானந்தன், செ. சபாலிங்கம், செ. பாரதி ஆகிய மூன்று அன்புச் செல்வங்களுளர். இவர்களுள் மூத்த மகனான செ. விவேகானந்தன் இறையடியெய்து விட்டார். இவரும் நாடறிந்த ஒரு நாடகக் கலைஞராவார்.

அல்வாயூரில் முதன்முறையாக ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்ற முதலாவது பயிற்றப்பட்ட ஆசிரியர் இவராவார். பிறப்பிலிருந்தே ஒரு தூய சைவனாக வாழ்ந்தவர். கடைசிகாலம்வரை கதாராடையை மட்டுமே அணிந்து வந்தார். கைநாடி பார்த்து நோய்க்குறிப்புச் சொல்வதில் இவர் சிறப்புமிக் கவர். அதேபோல ஜாதகம், கைரேகை போன்றவற்றைப் பார்ப் பதிலும் பிரதேசத்தில் தனித்துவமாக விளங்கி வந்தார். அல்வாயில் தற்போதும் செயற்பட்டுவரும் மனோகரா சனசமூக நிலை யத்தை ஸ்தாபித்தவரும் இவரே. சைவசமய சமரச சங்கத் தலைவராக தனது இறுதிக் காலம்வரை பணியாற்றி வந்தார். தனது 60வது வயதில் நல்லூர் ஆலய பிரவேச பேச்சுவார்த் தையில் கலந்துகொண்டிருந்த நேரத்தில் மாரடைப்பேற்பட்டு மரணமடைந்தார். 

1962ஆம் ஆண்டு ‘தங்கத் தமிழ் கண்’ எனும் கவிதைத் தொகுதி வெளிவந்தது. இக்கவிதைத் தொகுதி தமிழ் உரிமைப் போராட்ட உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்திருந்தது. விசேடமாக சிங்கள தனிச்சட்டம் இலங்கை அரசால் அமுல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில் தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான பாதிப்புக்களை இத்தொகுதியில் இடம்பெற்றிருந்த கவிதைகளிலிருந்து காணமுடிந்தது.

இவர் ஒரு புகழ்பெற்ற தமிழ் ஆசானாகக் காணப்பட்ட மையினால் மாணாக்கரின் நலன்கருதி தான் தொழிலிருந்து ஓய்வுபெற்ற பின் ‘பாசாப் பயிற்சி’ எனும் புத்தகத்தை 1963ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார்.

இவர் உயிரோடு வாழ்ந்த காலத்தில் ‘மேலைக் கரம்பன் முருக மூர்த்தி நேர்த்திக் காரிகை’ எழுதி, குலசமாநாதன் என்பவரால் வெளியிடப்பட்ட நூலே இவரின் இறுதி நூலாகும்.

இவரின் மறைவையடுத்து இவருடைய நினைவுதினம் (09.12.1966) கலாபஞ்சாங்க சித்திரைக் கலண்டரில் புகைப்புடத்துடன் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

கவிஞர் முருகர் செல்லையா அவர்களினால் எழுதப்பட்ட ‘அம்மா வெளியே வா அம்மா’ என்ற வளர்பிறைக் கவிதைத் தொகுதியில் இடம்பெற்ற பாடல் இலங்கை அரசின் பாடத்திட்ட நூலில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1982 ஆம் ஆண்டு நவம்பர் மாத மல்லிகை இதழ் இவருடைய புகைப்படத்தை அட்டைப் படத்தில் பிரசுரித்து கௌரவித்தது. ‘வாழும் பெயர்’ என்ற நினைவுக் குறிப்புரை பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் எழுதியுள்ளார்.

இவர் மறைந்தாலும் இவரின் நாமம் இன்னும் மறையவில்லை. இவர் பிறந்து வாழ்ந்து மறைந்த வீதிக்கு கவிஞர் செல்லையா வீதி என்று இன்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அல்வாயூர் சாமந்தரை ஆலடிப்பிள்ளையார் ஆலய முன்றலிலே ‘அல்வாயூர் கவிஞர் செல்லையா அரங்கு’ அமைக்கப்பட்டுள்ளது. அல்வாயூர் மனோகரன் கானசபாவினர் இன்றும் தமது ஆரம்பப் பாடலில் ‘அவனி போற்றும் கவிஞர் அல்வாயூர் செல்லை யாவை பணிவோமே பணிவோமே’ எனப் பாடி வருகின்றனர்.

 ‘இவர்கள் நம்மவர்கள்’ தொடரில் எம்மோடு வாழ்ந்து வருபவர்கள் மாத்திரமல்லாமல் எம்மோடு வாழ்ந்து தமிழுக்காகச் சேவை செய்து மறைந்த பெரியார்களினதும் விபரங்கள் பதிவாக்கப்படும். 

எம்மோடு வாழும் சமகாலத்தவர்கள் உரிய விபரங்களை தந்து ஒத்துழைப் பார்களாயின் தொடர்ந்தும் இதுபோன்ற பதிவுகள் மேற்கொள்ளப்படும். 

அமரர் முருகர் செல்லையா பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களையும், சான்றுகளையும் தந்துதவிய அல்வாய் தெற்கு பொன்மங்கலவாசம் சகோதரி வீ. சிவமணி அவர்களுக்கு விசேட நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

கே. ஞானசெல்வம் மகாதேவா

வட மாகாணம், யாழ்ப்பாண மாவட்டம், யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர் பிரிவில் கோண்டாவில் மேற்கு கிராமசேவகர் வசத்தில் வசித்துவந்த கே. ஞானசெல்வம்  மகாதேவா அவர்கள் ஒரு சிரேஸ்ட பத்திரிகையாளராவார்.

அரை நூற்றாண்டுகளுக்கு மேல் பத்திரிகைத் துறையில் தடம்பதித்து பத்திரிகைத் துறையையே தனது மூச்சாகக் கொண்டுள்ள கே. ஜி. மகாதேவா தற்போது குடும்பத்துடன் புலம்பெயர்ந்து இந்தியாவின் தமிழ்நாடு,  திருச்சியில் வசித்து வருகின்றார். பத்திரிகைத்துறையைப் போலவே எழுத்துத்துறையிலும் இவர் தடம்பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கே. ஜி. மகாதேவா, கே. ஜி. எம்,  மகான், ஊடுருவி,  மகள் சாந்தா ஆகிய பெயர்களிலும் எழுதி வருகின்றார்.

கே. ஞானசெல்வம், என். கனகம்மா தம்பதியினரின் புதல்வராக 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி மட்டக்களப்பில் பிறந்த மகாதேவா தனது ஆரம்பக் கல்வியை ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையிலும் பின்பு இடைநிலை உயர்தரக் கல்வியை மட்டக்களப்பு மத்திய கல்லூரி, மட்டக்களப்பு அரசினர் கல்லூரி, யாழ்ப்பாணம் ஸ்டான்லி கல்லூரி ஆகியவற்றில் பெற்றுள்ளார்.

தற்போதும்  ஒரு சுதந்திரப் பத்திரிகையாளரான இவரின் அன்புப் பாரியார் பத்மமீனா மகாதேவா ஆவார். ''பானை பிடித்தவள் பாக்கியசாலி" என்பார்கள். மகாதேவா வாழ்க்கையில் 'பேனா பிடித்தவள் பாக்கியசாலி' ஆனார். 1958 இல் வீரகேசரி இதழில்  வெளிவந்த மகாதேவாவின் கட்டுரையைப் பாராட்டி ஒரு பெண்ணிடமிருந்து கடிதம்  இவரது கல்லூரி விலாசத்துக்கு வந்தது. இதுவே பின்னர் பேனா நட்பாகி,  இரண்டு ஆண்டுகள் இருவரும் சந்திக்காமலேயே காதலாக கடிதம் மூலம் மலர்ந்து பின்னர் சந்தித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  மகாதேவா - பத்மமீனா தம்பதியினருக்கு சாந்தா, ஞானக்குமார், சந்திரிகா, ராஜேந்திரன், ராஜ்குமார், கோவதனி ஆகிய ஆறு அன்புச் செல்வங்களுள்ளனர்.

இவரது மாணவர் பருவத்தில் 11வது வயதிலே இவரின் கன்னியாக்கம் 1951ஆம் ஆண்டில் ஈழகேசரியில் வெளியாயிற்று. ‘இரத்தத்தில் கையெழுத்திட்டு பிரதமருக்கு  மாணவர் மகஜர்’ எனும் தலைப்பில் பிரசுரமானது. இவரது முதல் செய்தி ‘தமிழரசுக் கட்சியின் சத்தியாக்கிரகம்' எனும் தலைப்பில் 1961ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையில் பிரசுரமானது. இவற்றைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான ஆக்கங்களையும், விமர்சனங்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும், விமர்சனக்கட்டுரைகளையும் இவர் ஈழத்து, இந்திய தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதியுள்ளார்.

1951 முதல் 1954 வரை யாழ். ஈழகேசரியில் தான் எழுதிய குட்டிக்கதைகளை இன்றும் ஞாபகப்படுத்துவதில் மகிழ்ச்சியடையும் இவர், தனது மாணவர் பராயத்திலே ஈழகேசரியில் சின்னச் சின்ன செய்திகளையும் எழுதியுள்ளார்.  இவ்வாறாக சிறு வயதிலிருந்தே எழுத்துத் துறையில் ஈடுபட்டு வந்த மகாதேவா 1958ஆம் ஆண்டில் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த தமிழகம் வார இதழில் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்லையா ராசதுரை மற்றும் காசி ஆனந்தன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். பத்திரிகைத்துறையில் இவரின் பங்களிப்பு தமிழகம் வார இதழிலே ஆரம்பித்தது.

இதையடுத்து 1961ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த பிரபல பத்திரிகையான ஈழநாட்டில் செய்திப்பிரிவில் இணைந்து 1972 இல் இருந்து செய்தியாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.  1961ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை யாழ். ஈழநாட்டில் கடமையாற்றினார். இக்காலகட்டத்தில் - இடையே 1967 முதல் 1972ஆம் ஆண்டுவரை கண்டியில் இருந்து வெளிவந்த ‘செய்தி’ வார இதழிலும் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

1961 முதல் 1990 வரை முழுநேரப் பத்திரிகையாளராக தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை கழித்த இவர், பல்வேறு பட்ட பிரச்சினைகள், இடையூறுகள் மத்தியிலும் தொடர்ந்து வந்தார். 1989ம் ஆண்டில் தான் பணியாற்றிய ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் குண்டு வீச்சிக்கு இலக்கானதையடுத்து மனதளவில் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கும் சில இயக்கங்களின் கொலை அச்சுறுத்தல் காரணமாகவும் புலம்பெயர்ந்து இந்தியாவுக்குச் சென்றார். அதன் பின்பு முழுநேரப் பத்திரிகையாளர் பணியிலிருந்து ஒதுங்கி தற்போது லண்டனிலிருந்து வெளிவரும் புதினம் சஞ்சிகையின் தமிழக செய்தியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.

முழுநேரமாக பணியாற்றும்போது ஒரு பத்திரிகையிலேயே தமது பணியை வரையறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், பகுதிநேரமாக அப்பணியை மாற்றி ஒரு சுதந்திர பத்திரிகையாளனாக செயற்படும்போது கட்டுப்பாடுகளுக்கப்பால் சுயமாக கருத்துகளை வெளியிடக் கூடியதாக இருக்குமென குறிப்பிடும் மகாதேவா தற்போது ‘தினக்குரல்’ பத்திரிகைக்கும் அவ்வப்போது செய்திக் கட்டுரைகளை எழுதி வருவது குறிப்பிடத் தக்கது.

ஈழநாடு பத்திரிகையில் இவர் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டங்களில் 1981ஆம் ஆண்டு அரச கமான்டோ படையினரால் பத்திரிகை காரியாலயம் எரிக்கப்பட்ட நேரத்திலும், 1989ஆம் ஆண்டில் ஈழநாடு குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகிய நேரத்திலும் தான் கடமையிலீடுபட்டிருந்ததாகவும் அச்சம்பவங்களின்போது உயிர்பிழைத்தது மயிரிழையில் என்றும் அந்தக் கசப்பான அனுபவங்களை தற்போதும் இடைக்கிடையே ஞாபக மூட்டிக் கொள்வதுண்டு.

இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நேரத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஈழநாட்டிற்கு அளித்த பேட்டியை பிரசுரித்திருந்தது.  அப்பேட்டி தவறான கருத்துக்களுடன் மொழிபெயர்க்கப்பட்டு இலங்கை ரூபவாஹினியில் மும்மொழிச் செய்திகளிலும் ஒளிபரப்பப்பட்டது. இது குறித்து திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு தெரிவித்த புகாரையடுத்து இலங்கை வான்படையினர் தனி விமானம் மூலம் யாழ்ப்பாணத்திலிருந்து விசாரணைக்காக மகாதேவா கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மூல பேட்டிக்கும், ரூபவாஹினியில் ஒளிபரப்பப்பட்ட பேட்டிக்கும் இடையே காணப்பட்ட கருத்துப் பிழைகளைச் மகாதேவா விளக்கமாக சுட்டிக்காட்டிய பின்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா முறைப்பாட்டை வாபஸ் பெற்றுக் கொண்டார். தன்னுடைய ஊடகத்துறை அனுபவத்தில் ஒரு மறக்க முடியாத நினைவாக இச்சம்பவத்தை 2004ஆம் ஆண்டில் இவரால் வெளியிடப்பட்ட ‘நினைவலைகள்’ நூலில் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். 

கே.ஜி. மகாதேவா இதுவரை இரண்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். 2004ம் ஆண்டில் நினைவலைகள் எனும் தலைப்பில் சென்னை 24 கோடாம்பாக்கம், ஆற்காடு வீதியைச் சேர்ந்த மித்ர பப்ளிகேசன் இப்புத்தகத்தை வெளியிட்டிருந்தது. 212 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் தன்னுடைய சுயவாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களை அவர் எழுதியிருந்தார். குறிப்பாக இப்புத்தகத்தில் அவருடைய பத்திரிகைத்துறை வாழ்க்கை அனுபவங்கள் சுவைப்பட எழுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதே புத்தகம் 2005ம் ஆண்டில் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு Raminiscences  எனும் தலைப்பில் 139 பக்கங்களுடன் வெளிவந்தது.

2007ம் ஆண்டில் கதையல்ல நிஜம் எனும் தலைப்பில் இவரது இரண்டவது புத்தகம் வெளிவந்தது. இப்புத்தகத்தையும் சென்னை 24 கோடாம்பாக்கம், ஆற்காடு வீதியைச் சேர்ந்த மித்ர பப்ளிகேசன் வெளியிட்டிருந்தது. 232பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் தான் பணியாற்றிய ஈழநாடு பத்திரிகையில் தன்னால் நாள்தோறும் எழுதப்பட்ட ‘இப்படியும் நடக்கிறது’ எனும் பத்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்புக்களை சேர்த்திருந்தார்.

முடியுமானவரை எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே இலட்சியம். இதனுடன், ஆண்டுதோறும் ஒருநூல் வெளியிடவேண்டும் என்பது என் குறிக்கோள். வரலாற்றுப் பதிவில் ஈழநாடு எனும் எனது நூல் அடுத்த ஆண்டு வெளிவர இருக்கிறது. பல்கலைக்கழக மட்டத்தில் பத்திரிகைத்துறையில் இந்நூல் உதவவேண்டும் என்பது எனது எதிர்ப்பார்ப்பு என்று கூறும் இவர் தனது எழுத்துத்துறை ஈடுபாட்டுக்கு காரணமாக இருந்த வர்கள் என்றடிப்படையில் தனது சிறிய தந்தை மகா வித்துவான் வி.சீ. கந்தையா மற்றும் திருமதி கங்கேஸ்வரி கந்தையா, புலவர்மணி அ. பெரிய தம்பிப்பிள்ளை ஆகியோரை இன்றும் அன்புடன் நினைவுகூர்ந்து வருகின்றார்.

இவரின் முகவரி:-
K.G. MAHADEVA,
5, 8th CROSS,
THIRUNAGAR,
KARUMANDAPAM,
TIRUCHIRAPALLI – 620001,
TAMILNADU

சனி, 1 ஜனவரி, 2011

கந்தப்பன் செல்லத்தம்பி (ஆரையூர் இளவல்)

கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு தேர்தல் தொகுதி, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு, ஆரையம்பதி 01 கிராமசேவகர் வசத்தில் வசித்துவரும் ‘கந்தப்பன் செல்லத்தம்பி' அவர்கள் ஒரு மூத்த நாடகக் கலைஞரும்,  எழுத்தாளருமாவார்.

கணகதிப்பிள்ளை கந்தப்பன், வெள்ளையர் குறிஞ்சிப் பிள்ளை தம்பதியினரின் புதல்வராக 1935ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி ஆரையம்பதி முதலாம் குறிச்சியில் பிறந்த ‘செல்லத்தம்பி' மட்டக்களப்பு ஆரையம்பதி ஆர்.கே.எம். வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்பு மட்டக்களப்பு கோட்டைமுனை ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம், நுகேகொட திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர்கல்வியைப் பெற்றார். தொழில் ரீதியாக 1952 தொடக்கம் 1963 வரை எழுதுவினைஞராக அம்பாறை நதிப் பள்ளத்தாக்கு அபிவிருத்தி சபையில் பணியாற்றிய இவர், 1963.02.01 முதல் 1996.03.27 வரை மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக கிராமசேவையாளராக (தரம் 01) பணியாற்றி பிரதேச மக்களின் நல்லபிப்பிராயத்துக்கு பாத்திரமானார். தற்போது கிராம சேவை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். இவரின் அன்புப் பாரியார் தவமணிதேவி. இத்தம்பதியினருக்கு இளஞ்திருமாறன், இளஞ் செழியன், இளந்திரையன், இளங்குமரன், பங்கயற் செல்வி, தவச் செல்வி, தமிழ்ச் செல்வி, தாமரைச் செல்வி, தாரகைச் செல்வி ஆகிய அன்புச் செல்வங்களுளர். தமிழ்ச் செல்வி,  தாமரைச் செல்வி ஆகிய இரு புதல்விகளும் தந்தை வழியிலேயே இன்று நாடறிந்த கவிஞர்களாகவும்,  கலைஞர்களாகவும்,  எழுத்தாளர்களாகவும் சாதனை படைத்து வருகின்றார்கள்.

கலைத்துறை

1948ஆம் ஆண்டு முதல் மேடை நாடகங்கள்,  நாட்டுக் கூத்து, கிராமியக் கலைகள் என்ற அடிப்படையில் இவரது கலைப் பயணம் தொடர்கின்றது.

1948ஆம் ஆண்டு அரசடி மகாவித்தியாலய மண்டபத்தில் இவரால் எழுதி,  தயாரித்து, மேடையேற்றப்பட்ட ‘இராம இராச்சியம்' எனும் நாடகமே நாடகத்துறையில் இவரின் கன்னிப் படைப்பாகும். இதிலிருந்து (2007ஆம் ஆண்டு ஆரையம்பதி மகாவித்தியாலய அதிபரின் வேண்டுகோளுக்கமைய இவரால் எழுதி வழங்கப்பட்ட ‘பாடசாலையும் சமூகமும்' எனும் நாடகம் வரை) மொத்தம் 85 நாடகங்களை எழுதித் தயாரித்து மேடையேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த 85 நாடகங்களும் 1948 முதல் 2007 வரை 1008 தடவைகளுக்கு மேல் மேடையேற்றம் செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.  க. செல்லத்தம்பி ‘ஆரையூர் இளவல்' எனும் பெயரிலே அதிகளவில் நாடகப் பணியை ஆற்றியுள்ளார்.

இவரது நாடகங்களை பின்வரும் தலைப்புகளின் கீழ் பிரித்தாராயலாம்.

01.    புராதன நாடகங்கள்   
இவர் இதுவரை ஐந்து புராதன நாடகங்களை எழுதித் தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் வருமாறு:
  •    சிவத்தைத் தேடும் சீலர்கள் (1953),
  •    குழந்தைக் குமரன் (1960),
  •    கற்பனை கடந்த ஜோதி (1963),
  •    வினைதீர்க்கும் விநாயகன் (1968),
  •    பிட்டுக்கு மண் (1970),

02.    இத்திகாச நாடகங்கள்
இவர் இதுவரை ஒன்பது இத்திகாச நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் வருமாறு:
  • இராம இராச்சியம் (1948), 
  • இதய கீதம் (1950), 
  • நீறு பூத்த நெருப்பு (1972), 
  • மானம் காத்த மாவீரன் (1972), 
  • நெஞ்சிருக்கும் வரை (1973), 
  • பார்த்தசாரதி (1974), 
  • பிறப்பின் உயிர்ப்பு (1974), 
  • பிறை சூடிய பெருமான் (1975),
  • தெய்வப் பிரசாதம் (1980)

03.    இலக்கிய நாடகங்கள்
இவர் இதுவரை நான்கு இலக்கிய நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் வருமாறு:
  • கலி கொண்ட காவலன் (1972), 
  • கொடை வள்ளல் குமணன் (1980),
  • உண்மையே உயர்த்தும் (1981), 
  • உலகத்தை வென்றவர்கள் (1982)

04.    வரலாற்று நாடகங்கள்
இவர் இதுவரை பதினொரு வரலாற்று நாடகங் களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் வருமாறு:
  • போர் புயல் (1966), 
  • இதுதான் முடிவா? (1967),
  • சிங்களத்து சிங்காரி (1969),
  • நிலவறையிலே… (1969),
  • விதியின் சதியால் (1970),
  • விதைத்ததை அறுப்பார்கள் (1970),
  • திரைச் சுவர் (1973),
  • கரைந்ததா உன் கல் நெஞ்சம் (1974),
  • தர்மம் காத்த தலைவன் (1976),
  • வெற்றித் திருமகன் (1976),
  • பட்டத்தரசி (1977),

05.    சமூக நாடகங்கள்
இவர் இதுவரை ஐம்பத்தாறு சமூக நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் வருமாறு:
  • அம்மாமிர்தம் (1948),
  • யாதும் ஊரே… (1948),
  • உயிருக்கு உயிராய்.. (1948),
  • நாலும் தெரிந்தவன் (1949),
  • எல்லோரும் நல்லவரே! (1951),
  • இதயக் கோயில் (1962),
  • வாழ்ந்தது போதுமா? (1962),
  • உன்னை உனக்கு தெரியுமா? (1963),
  • படித்தவன் (1963),
  • எல்லோரும் வாழ வேண்டும் (1963),
  • தா… தெய்யத் தோம் (1964),
  • சித்தமெல்லாம் சிவன் (1964),
  • குதூகலன் குஞ்சப்பர் - நகைச்சுவை (1964), 
  • கண்கள் செய்த குற்றம் (1965),
  • மகா சக்தி (1965),
  • கறி தின்னும் கறிகள் (1965),
  • பார்த்தால் பசி தீரும் (1966),
  • தாமரை பூக்காத் தடாகம் (1966),
  • வேலிக்குப் போட்ட முள் (1966),
  • பஞ்சாமிர்தம் (1967),
  • அடுத்த வீட்டு அக்கா (1968),
  • அது அப்படித்தான் - நகைச்சுவை (1968), 
  • ஆத்ம தரிசனம் (1968),
  • குருவிக் கூடுகள் (1969),
  • படைத்தவனைப் படைத்தவர்கள் (1970), 
  • வெற்றிலை மாலை (1970),
  • மாமியார் வீடு (1970),
  • பொழுது விடிஞ்சா தீபாவளி (1970),
  • தேடிவந்த தெய்வங்கள் (1970),
  • ஆறும் நாறும் (1971),
  • பொழுதலைக் கேணி (1971),
  • வேரில் பழுத்த பலா, (1973),
  • அந்த ஒரு விநாடி? (1974),
  • போடியார் வீட்டு பூவரசு (1974),
  • நெருஞ்சிப் பூக்கள் (1975),
  • குடும்பம் ஒரு கோயில் (1977),
  • இருளில் இருந்து விளக்கு (1977),
  • எல்லாம் உனக்காக (1978),
  • கடன்படு திரவியங்கள் (1978),
  • சொர்க்கத்தின் வாயிலில் நரகத்தின் நிழல்கள் (1980),
  • ஆனந்தக் கூத்தன் (1980),
  • மனமே மாமருந்து (1980),
  • மன்னிக்க வேண்டுகிறேன் (1981),
  • சேவை செய்தாலே வாழலாம் (1981), 
  • தெய்வங்கள் வாழும் பூமி (1982),
  • ஒற்றுமையே உயர்த்தும் ஏணி (1984),
  • தொடரா முறிகள் (1985),
  • கவலைகள் மறப்போம் கலைகளை வளர்ப்போம் (1986),
  • நம்பிக்கைதான் நல்வாழ்வு (1992),
  • நல்லவையே வல்லவை (1992),
  • உன்னுள் ஒருவன் (1993),
  • வேண்டாம்… வேண்டவே வேண்டாம் (1994), 
  • என்றென்றும் மலரவேண்டும் மனிதாபிமானம் (1995),
  • இறைகாக்கும் (1995),
  • பாடசாலையும் சமூகமும் (2007)
ஆரையூர் இளவலின் ‘மண் சுமந்த மகேசன்' (மாணிக்கவாச சுவாமிகளின் சரிதம்) சின்னத்திரை வீடியோ நாடகமாகும். இந்நாடகத்தின் உள் அரங்கக் காட்சிகள் மட்டக்களப்பு ஆரையம் பதியிலும், வெளிப்புறக் காட்சிகள் மண்முனைப் பிரதேசத்திலும் படம் பிடிக்கப்பட்டன. 1980ஆம் ஆண்டு 06 மாதம் 27ஆம் திகதி மாணிக்கவாசகர் சுவாமிகள் குருபூசை தினத்தன்று இந்நாடகம் முதலாவது காட்சிக்கு விடப்பட்டு தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் ஆலய அரங்குகளிலும், பொது அரங்குகளிலும் காட்சியாக்கப்பட்டது.

கிழக்கிலங்கையில் முதல் முயற்சியென போற்றப்படும் இந்த சின்னத்திரை வீடியோ நாடகத்தினை கதை, வசனம், பாடல்கள், நெறியாள்கை செய்தவர் ஆரையூர் இளவலே.

நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ள இவர் இதுவரை 12 நாடகங்களில் நடித்துமுள்ளார்.

" கஸ்டப்படுவோர் முகம் மலர
கவலைப்படுவோர் அகம் குளிர
கடிந்துவரும் இன்னல்களை
இன்பங்களாக மாற்றிப் பணி புரிவோம். "

எனும் நோக்குடன் கலைத்துறை சேவையாற்றி வரும் இவரின் ‘அலங்கார ரூபம்' (தென்மோடி) 1971'  ‘சுபத்திரா கல்யாணம்' (வடமோடி) 1972 ஆகிய நாட்டுக்கூத்துகள் மக்கள் மத்தியில் ஜனரஞ்சகத்தன்மை பெற்றது. இவ்விரு நாட்டுக்கூத்துப் பாடல்களும் 1974ஆம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தினால் ஒலிப்பதிவு செய்யப்பட்டு மூன்று முறை ஒலிபரப் பியமை குறிப்பிடத்தக்கது.

இலக்கியத்துறை

நாடகத்துறையைப் போலவே இலக்கியத்துறையிலும் இவர் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்துள்ளார். இவரின் கன்னியாக்கம் ‘ஐந்து தலை நாகம்' எனும் தலைப்பில் 1952ம் ஆண்டு ‘சுதந்திரன்' பத்திரிகையில் பிரசுரமானது. அதிலிருந்து இதுவரை இருபத்தைந்து சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ள இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், இரண்டு நாவல்களையும் எழுதி யுள்ளார்.

அதேநேரம், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சமய, இலக்கிய சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. செல்லத்தம்பி அவர்கள் ஆரையூர் இளவர், ஆரையூர் இறை யடியான் ஆகிய பெயர்களிலும் எழுதி வருகின்றார்.

இவர் இதுவரை இரண்டு நூல்களை எழுதி வெளியிட் டுள்ளார்.

01.     ‘விபுலானந்தர் வாழ்கின்றார்.'

புனித செபஸ்டியன் அச்சகத்தில் அச்சிடப்பட்ட இக் கவிதை நூல் ‘ஆரையம்பதி ஸ்ரீமுருகன் இந்துமன்ற' வெளியீடாக 1991.09.27ஆம் திகதி வெளிவந்தது. இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கவிதைகளும்  இசைவடிவில் பின்பு இருவட்டுக்களாகவும் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

விபுலானந்தர் வாழ்கிறார் நூலுக்கு ஆசியுரை வழங்கி யுள்ள ‘ஸ்ரீராமகிருஸ்ண மிஸ்ன்' (இலங்கைக்கிளை), அருட்திரு. சுவாமி ஜீவனானந்த அடிகளார் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட் டிருந்தார்.

 “நம் ஈழமணித் திருநாடு அந்நியரின் ஆட்சிக்குட்பட்டு   நம்மவர்கள் அனைவரும் இருள் சூழ்ந்த வாழ்க்கை  வாழ்ந்த அண்மைக்காலத்தில் அவர்களுக்கு அறிவெனும்  சுடர் ஏற்றி ஒளிகொடுக்க வந்த பெருமக்களுள் ஒப்பற்றவர்         சுவாமி விபுலானந்த அடிகளாராவார்.

 சமூகத்திற்காக தமது வாழ்வை அர்ப்பணித்து சமூகத்தை  நன்னெறியில் இட்டுச் செல்லும் வெவ்வேறு பணிகளில்  பங்கெடுத்து சமூக மேம்பாட்டிலேயே கண்ணும் கருத்தும்  நிறைந்தவராக விளங்கிய சுவாமிகளை அன்னாரின்  பிறந்த நூற்றாண்டாகிய  இக்காலப் பகுதியில் கற்றோரும்,         இலங்கையில் ஆரையம்பதி, ஸ்ரீமுருகன் மன்றத்தினர்  அடிகளாரின் நினைவு எல்லோர் உள்ளத்திலும்   நிலைத்திட வேண்டும் எனும் பேரெண்ணத்துடன் கவிஞர் ‘ஆரையூர் இளவல்' சுவாமிகளின் நூற்றாண்டாகிய  இக்காலப் பகுதியில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இவர்  இயற்றிப் பாடிய பாடல்களை ஒன்றாகத் தொகுத்து   “விபுலானந்தர் வாழ்கின்றார்' எனும் தலைப்பில் நூல்         வடிவில் வெளிக்கொணர முயன்று வருவதை அறிந்து         மகிழ்ச்சியடைகிறேன்.'

02.     நீறு பூத்த நெருப்பு 

புராணம், இத்திகாசம், சமூகம் ஆகிய மூன்று தர நாடகங் களின் தொகுப்பு நூல் இதுவாகும். 1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி இந்நூலின் முதலாம் பதிப்பு வெளிவந்தது. மட்டக்களப்பு புனித வளவனார் கத்தோலிக்க அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்த இந்நூல் அன்பு வெளியீடாகும்.

மேலும் ஐந்து நூல்களை விரைவில் வெளியிடக்கூடிய நடவடிக்கையை மேற் கொண்டுள்ளார் என்பது மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு விடயம். அவை பின்வருமாறு:

01.    ‘இறை காக்கும்' (நாடகங்கள்) தொகுப்பு நூல்
02.    ‘கோடு கச்சேரி' (நாவல்)
03.    ‘மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கும் கிராமங்கள்'
04.    ‘வாழ்ந்தது போதுமா?' (சிறுகதைகள் தொகுப்பு)
05.    ‘இனிக்கும் நினைவுகளே இங்கே வாருங்கள்' (வரலாறு).
(அறுபது ஆண்டுக்கலை இலக்கியப் பொதுப் பணிகளில் நெஞ்சம் நெகிழ்வித்த இனிய நல் நிகழ்வுகள்)

இவரின் இத்தகைய பணிகளை கௌரவித்து பல சுயேச்சை நிறுவனங்களும், அரச நிறுவனங்களும் பல்வேறுபட்ட விருதுகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்கா அரசினால் வழங்கப்படும் உயரிய விருதான
 ‘கலாபூசணம்' விருது இவருக்கு 2007ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.     ஏழு தசாப்தங்களை கடந்த நிலையில் இன்னும் கலைத் தாய்க்கு கலைப்படைப்புக்களை வழங்கி வரும் ‘ஆரையூர் இளவல் க. செல்லத்தம்பி' தனது கலைத்துறை ஈடுபாட்டுக்கு காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் சுவாமி விபுலானந்த அடிகளாரையும், மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் சிரேஸ்ட விரிவுரையாளர் பண்டிதர் செ. பூபால பிள்ளை அவர்களையும், மூத்த எழுத்தாளரும், முன்னாள் மட்டக் களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் இரா. நாகலிங்கம் அவர்களையும் இன்றும் அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவரின் முகவரி:-

K. SELLATHAMBY
THAVAPATHY
ARAYAMPATHY 01,
BATTICALOLA.