திங்கள், 7 மார்ச், 2011

அமரர் கனகசபை சிவகுருநாதன்

இலங்கையில் வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டத்தில் புலோப்பளையினைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் கனகசபை சிவகுருநாதன் ‘கசின்’ எனும் பெயரால் நன்கு அறியப்பட்ட பல்துறை எழுத்தாளரும், சமூக சேவையாளருமாவார்.  1920ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி புலோப்பளையில் கனகசபை சேதுப்பிள்ளை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த இவர் க.வன்னியசிங்கம், பெ.நாகமுத்து, வ.சரஸ்வதி, பா. அன்னலட்சுமி ஆகியோரின் சகோதரராவார். சிவகுருநாதன் அவர்கள் தனது ஆரம்ப, இடைநிலைக் கல்வியினை உசன் இராமநாதன் கல்லூரி, அச்சுவேலி மத்திய மகாவித்தியாலயம், சாவக்கச்சேரி இந்துக் கல்லூரி ஆகியவற்றில் பெற்றார். 1940 ஆம் ஆண்டு திருநெல்வேலி ஆசிரியர் கலா சாலையில் ஆசிரியர் பயிற்சிக்காக சேர்ந்தார். அங்கு பண்டித மணி, சி.கணபதிப் பிள்ளை அவர்களின் வழிகாட்டலில் தமிழை நன்கு கற்றறிந்து 1943ஆம் ஆண்டு ஆசிரியராக வெளியேறி வவுனியாவில் கடமையாற்றினார்.

1950ஆம் ஆண்டில் பண்டிதர் பரீட்சை எழுதி அதில் சித்தியடைந்தார். அதன் பின்னர் செட்டிக்குளம், மன்னார், மத்துகம, கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் ஆசிரியப் பணி தொடர்ந்தது. அப்பகுதிகளில் அவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் இன்று உயர் பதவிகளில் இருப்பது அவரது சேவைக்கு எடுத்துக் காட்டாகும். 1971ஆம் ஆண்டு தொடக்கம் 1978ஆம் ஆண்டு சேவையிலிருந்து இளைப்பாறும்வரை உடுத்துறை மகாவித்தியா லயத்தின் அதிபராகக் கடமையாற்றினார். அக்காலப் பகுதியில் உடுத்துறை மகாவித்தியாலயம் பரீட்சைகளில் நல்ல பெறுபேற்றைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
‘கசின்’ சிவகுருநாதன் அவர்கள் சமூகப்பணி, இலக்கியப்பணி எனப் பல்வேறு துறைகளில் எமது சமூகத்திற்கு தொண்டாற்றினார். சாவகச்சேரி, சரசாலையில் வசிக்கும்போது இராமாவில் பிள்ளையார் கோவில் திருப்பணி, மட்டுவில் அம்மன் கோவில் திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் வாழ்ந்த “நிதானபுரி” இல்லம் என்றும் அவ்வூர் மக்களால் நிறைந்து இருக்கும். இவரது சோதிடப் புலமையே இதற்குக் காரணமாகும். எதுவித பலனையும் எதிர்பாராது இல்லம் வரும் சகலருக்கும் விவாகப் பொருத்தம், பலன் சொல்வார். அந்தப் பணி பிற்காலத் தில் பம்பலப்பிட்டி அரச தொடர்மாடியில் வாழ்ந்த போதும் தொடர்ந்தது.

அதிபர் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் தொண்ணூறுகளில் சில வருடங்கள் மன்னார் கேதீஸ்வரக் கோவலில் நிர்வாகப் பொறுப்பை ஏற்று திறன்பட நடத்தினார். இலங்கை இராணுவம் திருக்கேதீஸ்வரத்தை முற்றுகையிட்டபோது கோயிலில் கடமை புரிந்த ஊழியர்கள் எல்லோரும் வெளியேறி விட்ட நிலையில் கோவிலைப் பூட்டி இறுதியாக அங்கிருந்து வெளியேறியவர் சிவகுருநாதன் ஆவார். இறுதிக் காலத்தில் பம்பலப்பிட்டியில் வாழ்ந்தபோது கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அங்கு பால பண்டித வகுப்புகளில் இலவசமாக விரிவுரையாற்றினார். அவ்வகுப்புகளில் அரச சேவையில் பணியாற்றிய பலர் மாணவர்களாக விளங்கினார்கள். 1963ஆம் ஆண்டு கொழும்பில் கடமையாற்றியபோது இலங்கை கலை இலக்கிய பேரவையின் தலைவராக விளங்கினார். இவர் தலைவராக இருந்தபோது இலக்கியப் பேரவை பல இலக்கிய விழாக்களையும் இலக்கியக் கலந்துரையாடல்களையும் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
 
“கசின்” சிவகுருநாதனுடைய வாழ்க்கையில் அவர் ஆற்றிய ஆக்க இலக்கியப் பணி மிக உயர்ந்த இடத்தை வகிக்கின்றது. இவர் 1946ஆம் ஆண்டில் இலக்கியத்துறையில் காலடியெடுத்து வைத்துள்ளார். இவரின் கன்னியாக்கத்தை ஈழகேசரி பிரசுரித்துள்ளது. ஈழகேசரி உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
“கசின்” எனும் புனைப்பெயரில் முன்னைய இலக்கியத் தலை முறையினருக்கு நன்கு அறிமுகமான சிவகுருநாதன் ஆரம்ப காலங்களில் ஈழத்தில் அனைத்து பத்திரிகைகளிலும் நூற்றுக்கணக்கான ஆக்கங்களை எழுதியுள்ளார். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என முத்துறையிலும் “கசின்” அகலமாகவும், ஆழமாகவும் பாதம் பதித்திருந்தார்.
 
பண்டிதமணி கலாநிதி சி. கனபதிப்பிள்ளை அவர்களை என்றும் நினைவுகூர்ந்து வந்த இவரின் எழுத்துக்களில் பண்டித மணியின் சாயல்களை காணக்கூடியதாக இருக்கும்.  நகைச் சுவையுடன் எழுதி வந்த இவர் ஆனந்த விகடன் ஆசிரியர் தேவன் அவர்களை ஆக்க, இலக்கிய கர்த்தா என்ற வகையில் மானசீகமாக நேசித்து வந்தார்.
 
“கசின்” முதலில் ஒரு கட்டுரை ஆசிரியராகவே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார். இலக்கியம் என்றால் என்ன?, தமிழ் ஆசிரியர் வரலாறு, பாட்டியின் ஆராய்ச்சி ஆகிய கட்டுரைகள் ஈழகேசரியில் வெளிவந்த நேரத்தில் இவருக்குப் பெரும் வரவேற்பினை பெற்றுக் கொடுத்துள்ளன. பின்னர் நாவலாசிரியராகவும், சிறுகதையாசிரியராகவும் பரிணமித்த போதிலும்கூட, இவர் கட்டுரைகள் எழுதுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. இலக்கியம் தொடர்பாகவும், கல்வியியல் தொடர்பாகவும் பல கட்;டுரைகளை இவர் எழுதியுள்ளார். அக்கால கட்டத்தில் கல்வி வெள்ளை அறிக்கை பற்றி சிந்தாமணியில் இவர் எழுதிய கட்டுரை கல்விமான்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றது. ஆய்வுக் கட்டுரைகளை “சட்டம்பியார்” என்ற புனைப் பெயரில் எழுதுவதை இவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

1947ஆம் ஆண்டில் கசினின் முதலாவது ஆக்க இலக்கியமான “வண்டியில் வளர்ந்த கதை” தொடர் நாவலாக ஈழகேசரியில் பிரசுரமானது. அந்நாவலில் அவர் கையாண்ட உத்தி காலத்தின் புதுமையானதாக சித்திரிக்கப்பட்டது. புகையிரதத்தில் சந்திக்கும் இருவர் ஒருவரை ஒருவர் அறிய முடியாமல் காதல் கடிதங்களை பத்திரிகை மூலம் பரிமாறிக் கொள்கின்றனர். கடிதம் மூலம் நாவலை வளர்த்து செல்வது ஒரு புதிய பரிணா மமாக இருந்தது.
 
இவர் பிற்காலத்தில் எழுதிய நாவல்களிலும் கடிதங்கள் மூலம் கதையை வளர்த்து செல்கின்ற பாணி நிறையவே காணப்பட்டதை அவதானிக்க முடிகின்றது. சகட யோகம், இராசமணிச் சகோதரிகள், இதய ஊற்று, தேடிவந்த செல்வம், கற்பகம், நிதானபுரி, சொந்தக்காரன், கண்டெடுத்த கடிதங்கள் என பல நாவல்களை இவர் எழுதியுள்ளார். இதன் மூலமாக ஈழத்து இலக்கியவானில் இவர் தனியிடம் பிடித்திருந்தார்.

நாவல் இலக்கியத்தைப் போலவே சிறுகதை இலக்கியத்திலும் இவர் புதுமைகளை சாதித்துள்ளார். மணியோசை, நூலும் நூற்கயிறும், இது காதலல்ல, பச்சைக் கிளி, பஞ்சும், நெருப்பும், சிலந்திவளை, தமிழன்தான், வனசஞ்சாரம், குந்து மாணிக்கம் என்பன இவரின் சிறுகதைகளுள் சிலவாகும். ஈழத் தமிழர்களின் பழக்க வழக்கங்கள், பேச்சுமுறை போன்றவற்றை இவரின் சிறுகதைகளில் நிறையவே காணமுடிந்தது. மண்வாசனை ததும்ப எழுதுவதில் “கசின்” தனித்துவமிக்கவராக விளங்கினார். நேர்மையான போக்கும், விசால உள்ளமும், நடுநிலைக் கொள்கையும் உடையவர்களிடமிருந்து தான் சிறந்த இலக்கியங்கள் தோன்ற முடியும்’ என்ற கருத்தில் “கசின்” பிடிவாதமாக இருந்தார். இலங்கையின் அனைத்து தேசிய பத்திரிகைகளிலும் போல இவரின் ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரது இலக்கியச் சேவையைப் பாராட்டி 1994ஆம் ஆண்டு இலக்கியப் பேரவை யாழ் மண்ணில் விழா எடுத்து மூத்த எழுத்தாளரான இவரைக் கௌரவித்தது. இவரது தமிழ்ப் புலமையைப் பாராட்டி கொழும்பு தமிழ்ச்சங்கம் 1999ஆம் ஆண்டு நடாத்திய புலவர், வித்துவான்கள் மாநாட்டில் இவருக்கு ``இயற்றமிழ் வித்தகர்’’ என பட்டமளித்து கௌரவித்தது. 2000ஆம் ஆண்டு இவரது இலக்கியப் பணிக்காக இலங்கை அரச கலாசாரத் திணைக்களம் ``கலாபூசணம்’’ விருது வழங்கி கௌரவித்தது.

1944ஆம் ஆண்டு சரசாலை கணக்கர் கனகசபை செல்லம்மா தம்பதியினரின் மகளான இராசம்மாவை கரம்பிடித்து இல்லற வாழ்க்கையில் பிரவேசித்த இவருக்கு ஐந்து பிள்ளைகள் உளர். அவர்களில் மூவர் ஆண்பிள்ளைகள். இருவர் பெண்பிள்ளைகள். மூத்த மகள் புஷ்பராணி. மூத்த மகன் புஷ்பநாதன். அடுத்த பிள்ளைகள் செல்வராணி, சபாநாதன், கேதீஸ்வரநாதன் ஆகியோராவர்.
 
2003ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 13ஆம் திகதி இவர் எம்மைவிட்டு பிரிந்தாலும் இவரின் சமூக மற்றும் இலக்கிய சேவைகள் எம்மைவிட்டுப் பிரியாது. இவரின் பல படைப்புகள் நூலுருப் பெறாமல் இருக்கின்றன என அறிய முடிகின்றது. இருப்பினும் இவரது நூலுருவான சில படைப்புகளின் விபரம் வருமாறு:

நிதானபுரி
கசின் எழுதிய நான்கு குறுநாவல்களின் தொகுதி இதுவாகும். இத் தொகுதியில் நிதானபுரி, கற்பகம், சொந்தக்கால், தேடிவந்த செல்வம் ஆகிய  நான்கு குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுதியின் முதற்பதிப்பு 1995ம் ஆண்டு டிசம்பரில் கொழும்பு சிற்றிசன் பிரின்டர்ஸ்ஸில் அச்சிடப்பட்டு சீ.சபாநாதன் அவர்களினால் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் 150 பக்கங்களைக் கொண்டது. 

காதலும் கடிதமும்.
இந்நூலில் வண்டியில் வளர்ந்த கதை, கண்டெடுத்த கடிதங்கள் ஆகிய இரண்டு கதைகள் பிரசுரமாகியுள்ளன. இவ்விரு கதைகளும் முறையே ஈழகேசரி, வீரகேசரியில் பிரசுரமானவையாகும். இத்தொகுதியின் முதற்பதிப்பு 1995ம் ஆண்டில் கொழும்பு சிற்றிசன் பிரின்டர்ஸ்ஸில் அச்சிடப்பட்டு சீ.சபாநாதன் அவர்களினால் வெளியிடப்பட்டது.

கசின் சிறுகதைகள்.
இந்நூல் யாழ். இலக்கியவட்டம் வெளியிடாக 1999 ஏப்ரல் மாதம் முதலாம் பதிப்பு வெளிவந்தது. இந்நூலினை பொ. ஆனந்த லிங்கம் என்பவர் தொகுத்திருந்தார். இந்நூலின் விலை 125 ரூபாவாகும். இந்நூலில் கசின் அவர்களினால் எழுதப்பட்ட 15 சிறுகதைகள் சேர்க்கப்பட்டுள்ளன.150 பக்கங்களைக் கொண்ட இத்தொகுதிக்கு கலாநிதி க. குணராசா அணிந்துரை வழங்கியிருந்தார். 

குமாரி இரஞ்சிதம்.
இந்நூல் கல்ஹின்னை தமிழ் மன்றத்தின் 95வது வெளியிடாக  முதற்பதிப்பு 2000ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வெளிவந்தது. இது ஒரு நாவலாகும்.

சகடயோகம்.
இந்நூல் பம்பலப்பிட்டி சந்ரா வெளியீடாக முதற்பதிப்பு 2001ம் ஆண்டு ஜுன் மாதம்  வெளிவந்தது. இதுவும் ஒரு நாவலாகும்.    

கசின் நினைவலைகள். 
இந்நூல் கசின் அவர்களின்  வாழ்க்கைச் சுவடும் இலக்கியப் பதிவும்கொண்டதாக அமைந்துள்ளது. இந்நூலை பொ. ஆனந்தலிங்கம் தொகுத்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக