திங்கள், 31 ஜனவரி, 2011

முருகர் செல்லையா

வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டம், உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் அல்வாய் ஜே - 378 கிராமசேவகர் வசத்தில் நிரந்தரமாக வசித்து வந்த முருகர் செல்லையா ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு முதுபெரும் புலவராக விளங்கியவர். இயல்பாக கவி பாடக்கூடிய ஆற்றல்மிக்க  இவர், எழுத்துருவிலும் பல படைப்புகளை முன்வைத்துள்ளார். 1966ஆம் ஆண்டு டிசம்பர் 09ஆந் திகதி தனது 60வது வயதில் இவர் அமரத்துவமடைந்த போதிலும்கூட இவரின் தமிழ்ச் சேவைகளும்,  இலக்கியச் சேவைகளும் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

1906 ஆம் ஆண்டில் ஒக்டோபர் மாதம் 07ஆந் திகதி முருகர், குஞ்சரம் தம்பதியினரின் புதல்வராக அல்வாயில் பிறந்தவரே செல்லையா. இவர் யாழ்ப்பாணம், தேவரையாழி சைவ வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்று பின் பலாலி ஆசிரியர்  பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற ஒரு தமிழ் ஆசானாவார். இவரின் தமிழ்மொழிப் போதனையால் யாழ் மண்ணில் பல நூற்றுக்கணக்கான சாதனைப்படைத்த நல்மாணாக்களை உருவாக்கினார். இவர்களுள் சிலர் இன்றும் சாதனையாளர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். ஆர்ப்பாட்டமில்லாமல் மிக அமைதியா கவும், தெளிவாகவும் போதிக்கும் கருத்துக்களை மாணாக்களின் மனங்களில் பதிய வைப்பதில் இவரின் திறமை தனித்துவமானது என்று அவர்களின் மாணாக்கள் கூறும்போது செல்லையாவின் கற்பித்தல் ஆற்றலை எடைபோடக்கூடியதாக இருக்கின்றது.

இவரின் கற்பித்தல் பாங்கில் இலக்கிய நயம் மிகைத்திருக்கும். கவி நயம் மிகைத்திருக்கும். எந்தவொரு போதனையையும் எதுகை மோனையுடன் போதிக்கும் பாங்கு இவரின் சிறப்பம்சமாகும். இலக்கிய ரீதியில் கவிஞர் செல்லையா அனுசுயா, அமுதன், முருகபூபதி ஆகிய பெயர்களில் எழுதி வந்த இவரின் அன்புப் பாரியார் செ. நாகமுத்து. இத்தம்பதியினருக்கு செ. விவேகானந்தன், செ. சபாலிங்கம், செ. பாரதி ஆகிய மூன்று அன்புச் செல்வங்களுளர். இவர்களுள் மூத்த மகனான செ. விவேகானந்தன் இறையடியெய்து விட்டார். இவரும் நாடறிந்த ஒரு நாடகக் கலைஞராவார்.

அல்வாயூரில் முதன்முறையாக ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்ற முதலாவது பயிற்றப்பட்ட ஆசிரியர் இவராவார். பிறப்பிலிருந்தே ஒரு தூய சைவனாக வாழ்ந்தவர். கடைசிகாலம்வரை கதாராடையை மட்டுமே அணிந்து வந்தார். கைநாடி பார்த்து நோய்க்குறிப்புச் சொல்வதில் இவர் சிறப்புமிக் கவர். அதேபோல ஜாதகம், கைரேகை போன்றவற்றைப் பார்ப் பதிலும் பிரதேசத்தில் தனித்துவமாக விளங்கி வந்தார். அல்வாயில் தற்போதும் செயற்பட்டுவரும் மனோகரா சனசமூக நிலை யத்தை ஸ்தாபித்தவரும் இவரே. சைவசமய சமரச சங்கத் தலைவராக தனது இறுதிக் காலம்வரை பணியாற்றி வந்தார். தனது 60வது வயதில் நல்லூர் ஆலய பிரவேச பேச்சுவார்த் தையில் கலந்துகொண்டிருந்த நேரத்தில் மாரடைப்பேற்பட்டு மரணமடைந்தார். 

1962ஆம் ஆண்டு ‘தங்கத் தமிழ் கண்’ எனும் கவிதைத் தொகுதி வெளிவந்தது. இக்கவிதைத் தொகுதி தமிழ் உரிமைப் போராட்ட உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்திருந்தது. விசேடமாக சிங்கள தனிச்சட்டம் இலங்கை அரசால் அமுல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில் தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான பாதிப்புக்களை இத்தொகுதியில் இடம்பெற்றிருந்த கவிதைகளிலிருந்து காணமுடிந்தது.

இவர் ஒரு புகழ்பெற்ற தமிழ் ஆசானாகக் காணப்பட்ட மையினால் மாணாக்கரின் நலன்கருதி தான் தொழிலிருந்து ஓய்வுபெற்ற பின் ‘பாசாப் பயிற்சி’ எனும் புத்தகத்தை 1963ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார்.

இவர் உயிரோடு வாழ்ந்த காலத்தில் ‘மேலைக் கரம்பன் முருக மூர்த்தி நேர்த்திக் காரிகை’ எழுதி, குலசமாநாதன் என்பவரால் வெளியிடப்பட்ட நூலே இவரின் இறுதி நூலாகும்.

இவரின் மறைவையடுத்து இவருடைய நினைவுதினம் (09.12.1966) கலாபஞ்சாங்க சித்திரைக் கலண்டரில் புகைப்புடத்துடன் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

கவிஞர் முருகர் செல்லையா அவர்களினால் எழுதப்பட்ட ‘அம்மா வெளியே வா அம்மா’ என்ற வளர்பிறைக் கவிதைத் தொகுதியில் இடம்பெற்ற பாடல் இலங்கை அரசின் பாடத்திட்ட நூலில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1982 ஆம் ஆண்டு நவம்பர் மாத மல்லிகை இதழ் இவருடைய புகைப்படத்தை அட்டைப் படத்தில் பிரசுரித்து கௌரவித்தது. ‘வாழும் பெயர்’ என்ற நினைவுக் குறிப்புரை பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் எழுதியுள்ளார்.

இவர் மறைந்தாலும் இவரின் நாமம் இன்னும் மறையவில்லை. இவர் பிறந்து வாழ்ந்து மறைந்த வீதிக்கு கவிஞர் செல்லையா வீதி என்று இன்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அல்வாயூர் சாமந்தரை ஆலடிப்பிள்ளையார் ஆலய முன்றலிலே ‘அல்வாயூர் கவிஞர் செல்லையா அரங்கு’ அமைக்கப்பட்டுள்ளது. அல்வாயூர் மனோகரன் கானசபாவினர் இன்றும் தமது ஆரம்பப் பாடலில் ‘அவனி போற்றும் கவிஞர் அல்வாயூர் செல்லை யாவை பணிவோமே பணிவோமே’ எனப் பாடி வருகின்றனர்.

 ‘இவர்கள் நம்மவர்கள்’ தொடரில் எம்மோடு வாழ்ந்து வருபவர்கள் மாத்திரமல்லாமல் எம்மோடு வாழ்ந்து தமிழுக்காகச் சேவை செய்து மறைந்த பெரியார்களினதும் விபரங்கள் பதிவாக்கப்படும். 

எம்மோடு வாழும் சமகாலத்தவர்கள் உரிய விபரங்களை தந்து ஒத்துழைப் பார்களாயின் தொடர்ந்தும் இதுபோன்ற பதிவுகள் மேற்கொள்ளப்படும். 

அமரர் முருகர் செல்லையா பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களையும், சான்றுகளையும் தந்துதவிய அல்வாய் தெற்கு பொன்மங்கலவாசம் சகோதரி வீ. சிவமணி அவர்களுக்கு விசேட நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

கே. ஞானசெல்வம் மகாதேவா

வட மாகாணம், யாழ்ப்பாண மாவட்டம், யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர் பிரிவில் கோண்டாவில் மேற்கு கிராமசேவகர் வசத்தில் வசித்துவந்த கே. ஞானசெல்வம்  மகாதேவா அவர்கள் ஒரு சிரேஸ்ட பத்திரிகையாளராவார்.

அரை நூற்றாண்டுகளுக்கு மேல் பத்திரிகைத் துறையில் தடம்பதித்து பத்திரிகைத் துறையையே தனது மூச்சாகக் கொண்டுள்ள கே. ஜி. மகாதேவா தற்போது குடும்பத்துடன் புலம்பெயர்ந்து இந்தியாவின் தமிழ்நாடு,  திருச்சியில் வசித்து வருகின்றார். பத்திரிகைத்துறையைப் போலவே எழுத்துத்துறையிலும் இவர் தடம்பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கே. ஜி. மகாதேவா, கே. ஜி. எம்,  மகான், ஊடுருவி,  மகள் சாந்தா ஆகிய பெயர்களிலும் எழுதி வருகின்றார்.

கே. ஞானசெல்வம், என். கனகம்மா தம்பதியினரின் புதல்வராக 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி மட்டக்களப்பில் பிறந்த மகாதேவா தனது ஆரம்பக் கல்வியை ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையிலும் பின்பு இடைநிலை உயர்தரக் கல்வியை மட்டக்களப்பு மத்திய கல்லூரி, மட்டக்களப்பு அரசினர் கல்லூரி, யாழ்ப்பாணம் ஸ்டான்லி கல்லூரி ஆகியவற்றில் பெற்றுள்ளார்.

தற்போதும்  ஒரு சுதந்திரப் பத்திரிகையாளரான இவரின் அன்புப் பாரியார் பத்மமீனா மகாதேவா ஆவார். ''பானை பிடித்தவள் பாக்கியசாலி" என்பார்கள். மகாதேவா வாழ்க்கையில் 'பேனா பிடித்தவள் பாக்கியசாலி' ஆனார். 1958 இல் வீரகேசரி இதழில்  வெளிவந்த மகாதேவாவின் கட்டுரையைப் பாராட்டி ஒரு பெண்ணிடமிருந்து கடிதம்  இவரது கல்லூரி விலாசத்துக்கு வந்தது. இதுவே பின்னர் பேனா நட்பாகி,  இரண்டு ஆண்டுகள் இருவரும் சந்திக்காமலேயே காதலாக கடிதம் மூலம் மலர்ந்து பின்னர் சந்தித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  மகாதேவா - பத்மமீனா தம்பதியினருக்கு சாந்தா, ஞானக்குமார், சந்திரிகா, ராஜேந்திரன், ராஜ்குமார், கோவதனி ஆகிய ஆறு அன்புச் செல்வங்களுள்ளனர்.

இவரது மாணவர் பருவத்தில் 11வது வயதிலே இவரின் கன்னியாக்கம் 1951ஆம் ஆண்டில் ஈழகேசரியில் வெளியாயிற்று. ‘இரத்தத்தில் கையெழுத்திட்டு பிரதமருக்கு  மாணவர் மகஜர்’ எனும் தலைப்பில் பிரசுரமானது. இவரது முதல் செய்தி ‘தமிழரசுக் கட்சியின் சத்தியாக்கிரகம்' எனும் தலைப்பில் 1961ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையில் பிரசுரமானது. இவற்றைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான ஆக்கங்களையும், விமர்சனங்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும், விமர்சனக்கட்டுரைகளையும் இவர் ஈழத்து, இந்திய தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதியுள்ளார்.

1951 முதல் 1954 வரை யாழ். ஈழகேசரியில் தான் எழுதிய குட்டிக்கதைகளை இன்றும் ஞாபகப்படுத்துவதில் மகிழ்ச்சியடையும் இவர், தனது மாணவர் பராயத்திலே ஈழகேசரியில் சின்னச் சின்ன செய்திகளையும் எழுதியுள்ளார்.  இவ்வாறாக சிறு வயதிலிருந்தே எழுத்துத் துறையில் ஈடுபட்டு வந்த மகாதேவா 1958ஆம் ஆண்டில் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த தமிழகம் வார இதழில் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்லையா ராசதுரை மற்றும் காசி ஆனந்தன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். பத்திரிகைத்துறையில் இவரின் பங்களிப்பு தமிழகம் வார இதழிலே ஆரம்பித்தது.

இதையடுத்து 1961ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த பிரபல பத்திரிகையான ஈழநாட்டில் செய்திப்பிரிவில் இணைந்து 1972 இல் இருந்து செய்தியாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.  1961ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை யாழ். ஈழநாட்டில் கடமையாற்றினார். இக்காலகட்டத்தில் - இடையே 1967 முதல் 1972ஆம் ஆண்டுவரை கண்டியில் இருந்து வெளிவந்த ‘செய்தி’ வார இதழிலும் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

1961 முதல் 1990 வரை முழுநேரப் பத்திரிகையாளராக தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை கழித்த இவர், பல்வேறு பட்ட பிரச்சினைகள், இடையூறுகள் மத்தியிலும் தொடர்ந்து வந்தார். 1989ம் ஆண்டில் தான் பணியாற்றிய ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் குண்டு வீச்சிக்கு இலக்கானதையடுத்து மனதளவில் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கும் சில இயக்கங்களின் கொலை அச்சுறுத்தல் காரணமாகவும் புலம்பெயர்ந்து இந்தியாவுக்குச் சென்றார். அதன் பின்பு முழுநேரப் பத்திரிகையாளர் பணியிலிருந்து ஒதுங்கி தற்போது லண்டனிலிருந்து வெளிவரும் புதினம் சஞ்சிகையின் தமிழக செய்தியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.

முழுநேரமாக பணியாற்றும்போது ஒரு பத்திரிகையிலேயே தமது பணியை வரையறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், பகுதிநேரமாக அப்பணியை மாற்றி ஒரு சுதந்திர பத்திரிகையாளனாக செயற்படும்போது கட்டுப்பாடுகளுக்கப்பால் சுயமாக கருத்துகளை வெளியிடக் கூடியதாக இருக்குமென குறிப்பிடும் மகாதேவா தற்போது ‘தினக்குரல்’ பத்திரிகைக்கும் அவ்வப்போது செய்திக் கட்டுரைகளை எழுதி வருவது குறிப்பிடத் தக்கது.

ஈழநாடு பத்திரிகையில் இவர் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டங்களில் 1981ஆம் ஆண்டு அரச கமான்டோ படையினரால் பத்திரிகை காரியாலயம் எரிக்கப்பட்ட நேரத்திலும், 1989ஆம் ஆண்டில் ஈழநாடு குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகிய நேரத்திலும் தான் கடமையிலீடுபட்டிருந்ததாகவும் அச்சம்பவங்களின்போது உயிர்பிழைத்தது மயிரிழையில் என்றும் அந்தக் கசப்பான அனுபவங்களை தற்போதும் இடைக்கிடையே ஞாபக மூட்டிக் கொள்வதுண்டு.

இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நேரத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஈழநாட்டிற்கு அளித்த பேட்டியை பிரசுரித்திருந்தது.  அப்பேட்டி தவறான கருத்துக்களுடன் மொழிபெயர்க்கப்பட்டு இலங்கை ரூபவாஹினியில் மும்மொழிச் செய்திகளிலும் ஒளிபரப்பப்பட்டது. இது குறித்து திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு தெரிவித்த புகாரையடுத்து இலங்கை வான்படையினர் தனி விமானம் மூலம் யாழ்ப்பாணத்திலிருந்து விசாரணைக்காக மகாதேவா கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மூல பேட்டிக்கும், ரூபவாஹினியில் ஒளிபரப்பப்பட்ட பேட்டிக்கும் இடையே காணப்பட்ட கருத்துப் பிழைகளைச் மகாதேவா விளக்கமாக சுட்டிக்காட்டிய பின்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா முறைப்பாட்டை வாபஸ் பெற்றுக் கொண்டார். தன்னுடைய ஊடகத்துறை அனுபவத்தில் ஒரு மறக்க முடியாத நினைவாக இச்சம்பவத்தை 2004ஆம் ஆண்டில் இவரால் வெளியிடப்பட்ட ‘நினைவலைகள்’ நூலில் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். 

கே.ஜி. மகாதேவா இதுவரை இரண்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். 2004ம் ஆண்டில் நினைவலைகள் எனும் தலைப்பில் சென்னை 24 கோடாம்பாக்கம், ஆற்காடு வீதியைச் சேர்ந்த மித்ர பப்ளிகேசன் இப்புத்தகத்தை வெளியிட்டிருந்தது. 212 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் தன்னுடைய சுயவாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களை அவர் எழுதியிருந்தார். குறிப்பாக இப்புத்தகத்தில் அவருடைய பத்திரிகைத்துறை வாழ்க்கை அனுபவங்கள் சுவைப்பட எழுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதே புத்தகம் 2005ம் ஆண்டில் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு Raminiscences  எனும் தலைப்பில் 139 பக்கங்களுடன் வெளிவந்தது.

2007ம் ஆண்டில் கதையல்ல நிஜம் எனும் தலைப்பில் இவரது இரண்டவது புத்தகம் வெளிவந்தது. இப்புத்தகத்தையும் சென்னை 24 கோடாம்பாக்கம், ஆற்காடு வீதியைச் சேர்ந்த மித்ர பப்ளிகேசன் வெளியிட்டிருந்தது. 232பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் தான் பணியாற்றிய ஈழநாடு பத்திரிகையில் தன்னால் நாள்தோறும் எழுதப்பட்ட ‘இப்படியும் நடக்கிறது’ எனும் பத்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்புக்களை சேர்த்திருந்தார்.

முடியுமானவரை எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே இலட்சியம். இதனுடன், ஆண்டுதோறும் ஒருநூல் வெளியிடவேண்டும் என்பது என் குறிக்கோள். வரலாற்றுப் பதிவில் ஈழநாடு எனும் எனது நூல் அடுத்த ஆண்டு வெளிவர இருக்கிறது. பல்கலைக்கழக மட்டத்தில் பத்திரிகைத்துறையில் இந்நூல் உதவவேண்டும் என்பது எனது எதிர்ப்பார்ப்பு என்று கூறும் இவர் தனது எழுத்துத்துறை ஈடுபாட்டுக்கு காரணமாக இருந்த வர்கள் என்றடிப்படையில் தனது சிறிய தந்தை மகா வித்துவான் வி.சீ. கந்தையா மற்றும் திருமதி கங்கேஸ்வரி கந்தையா, புலவர்மணி அ. பெரிய தம்பிப்பிள்ளை ஆகியோரை இன்றும் அன்புடன் நினைவுகூர்ந்து வருகின்றார்.

இவரின் முகவரி:-
K.G. MAHADEVA,
5, 8th CROSS,
THIRUNAGAR,
KARUMANDAPAM,
TIRUCHIRAPALLI – 620001,
TAMILNADU

சனி, 1 ஜனவரி, 2011

கந்தப்பன் செல்லத்தம்பி (ஆரையூர் இளவல்)

கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு தேர்தல் தொகுதி, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு, ஆரையம்பதி 01 கிராமசேவகர் வசத்தில் வசித்துவரும் ‘கந்தப்பன் செல்லத்தம்பி' அவர்கள் ஒரு மூத்த நாடகக் கலைஞரும்,  எழுத்தாளருமாவார்.

கணகதிப்பிள்ளை கந்தப்பன், வெள்ளையர் குறிஞ்சிப் பிள்ளை தம்பதியினரின் புதல்வராக 1935ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி ஆரையம்பதி முதலாம் குறிச்சியில் பிறந்த ‘செல்லத்தம்பி' மட்டக்களப்பு ஆரையம்பதி ஆர்.கே.எம். வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்பு மட்டக்களப்பு கோட்டைமுனை ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம், நுகேகொட திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர்கல்வியைப் பெற்றார். தொழில் ரீதியாக 1952 தொடக்கம் 1963 வரை எழுதுவினைஞராக அம்பாறை நதிப் பள்ளத்தாக்கு அபிவிருத்தி சபையில் பணியாற்றிய இவர், 1963.02.01 முதல் 1996.03.27 வரை மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக கிராமசேவையாளராக (தரம் 01) பணியாற்றி பிரதேச மக்களின் நல்லபிப்பிராயத்துக்கு பாத்திரமானார். தற்போது கிராம சேவை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். இவரின் அன்புப் பாரியார் தவமணிதேவி. இத்தம்பதியினருக்கு இளஞ்திருமாறன், இளஞ் செழியன், இளந்திரையன், இளங்குமரன், பங்கயற் செல்வி, தவச் செல்வி, தமிழ்ச் செல்வி, தாமரைச் செல்வி, தாரகைச் செல்வி ஆகிய அன்புச் செல்வங்களுளர். தமிழ்ச் செல்வி,  தாமரைச் செல்வி ஆகிய இரு புதல்விகளும் தந்தை வழியிலேயே இன்று நாடறிந்த கவிஞர்களாகவும்,  கலைஞர்களாகவும்,  எழுத்தாளர்களாகவும் சாதனை படைத்து வருகின்றார்கள்.

கலைத்துறை

1948ஆம் ஆண்டு முதல் மேடை நாடகங்கள்,  நாட்டுக் கூத்து, கிராமியக் கலைகள் என்ற அடிப்படையில் இவரது கலைப் பயணம் தொடர்கின்றது.

1948ஆம் ஆண்டு அரசடி மகாவித்தியாலய மண்டபத்தில் இவரால் எழுதி,  தயாரித்து, மேடையேற்றப்பட்ட ‘இராம இராச்சியம்' எனும் நாடகமே நாடகத்துறையில் இவரின் கன்னிப் படைப்பாகும். இதிலிருந்து (2007ஆம் ஆண்டு ஆரையம்பதி மகாவித்தியாலய அதிபரின் வேண்டுகோளுக்கமைய இவரால் எழுதி வழங்கப்பட்ட ‘பாடசாலையும் சமூகமும்' எனும் நாடகம் வரை) மொத்தம் 85 நாடகங்களை எழுதித் தயாரித்து மேடையேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த 85 நாடகங்களும் 1948 முதல் 2007 வரை 1008 தடவைகளுக்கு மேல் மேடையேற்றம் செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.  க. செல்லத்தம்பி ‘ஆரையூர் இளவல்' எனும் பெயரிலே அதிகளவில் நாடகப் பணியை ஆற்றியுள்ளார்.

இவரது நாடகங்களை பின்வரும் தலைப்புகளின் கீழ் பிரித்தாராயலாம்.

01.    புராதன நாடகங்கள்   
இவர் இதுவரை ஐந்து புராதன நாடகங்களை எழுதித் தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் வருமாறு:
  •    சிவத்தைத் தேடும் சீலர்கள் (1953),
  •    குழந்தைக் குமரன் (1960),
  •    கற்பனை கடந்த ஜோதி (1963),
  •    வினைதீர்க்கும் விநாயகன் (1968),
  •    பிட்டுக்கு மண் (1970),

02.    இத்திகாச நாடகங்கள்
இவர் இதுவரை ஒன்பது இத்திகாச நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் வருமாறு:
  • இராம இராச்சியம் (1948), 
  • இதய கீதம் (1950), 
  • நீறு பூத்த நெருப்பு (1972), 
  • மானம் காத்த மாவீரன் (1972), 
  • நெஞ்சிருக்கும் வரை (1973), 
  • பார்த்தசாரதி (1974), 
  • பிறப்பின் உயிர்ப்பு (1974), 
  • பிறை சூடிய பெருமான் (1975),
  • தெய்வப் பிரசாதம் (1980)

03.    இலக்கிய நாடகங்கள்
இவர் இதுவரை நான்கு இலக்கிய நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் வருமாறு:
  • கலி கொண்ட காவலன் (1972), 
  • கொடை வள்ளல் குமணன் (1980),
  • உண்மையே உயர்த்தும் (1981), 
  • உலகத்தை வென்றவர்கள் (1982)

04.    வரலாற்று நாடகங்கள்
இவர் இதுவரை பதினொரு வரலாற்று நாடகங் களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் வருமாறு:
  • போர் புயல் (1966), 
  • இதுதான் முடிவா? (1967),
  • சிங்களத்து சிங்காரி (1969),
  • நிலவறையிலே… (1969),
  • விதியின் சதியால் (1970),
  • விதைத்ததை அறுப்பார்கள் (1970),
  • திரைச் சுவர் (1973),
  • கரைந்ததா உன் கல் நெஞ்சம் (1974),
  • தர்மம் காத்த தலைவன் (1976),
  • வெற்றித் திருமகன் (1976),
  • பட்டத்தரசி (1977),

05.    சமூக நாடகங்கள்
இவர் இதுவரை ஐம்பத்தாறு சமூக நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் வருமாறு:
  • அம்மாமிர்தம் (1948),
  • யாதும் ஊரே… (1948),
  • உயிருக்கு உயிராய்.. (1948),
  • நாலும் தெரிந்தவன் (1949),
  • எல்லோரும் நல்லவரே! (1951),
  • இதயக் கோயில் (1962),
  • வாழ்ந்தது போதுமா? (1962),
  • உன்னை உனக்கு தெரியுமா? (1963),
  • படித்தவன் (1963),
  • எல்லோரும் வாழ வேண்டும் (1963),
  • தா… தெய்யத் தோம் (1964),
  • சித்தமெல்லாம் சிவன் (1964),
  • குதூகலன் குஞ்சப்பர் - நகைச்சுவை (1964), 
  • கண்கள் செய்த குற்றம் (1965),
  • மகா சக்தி (1965),
  • கறி தின்னும் கறிகள் (1965),
  • பார்த்தால் பசி தீரும் (1966),
  • தாமரை பூக்காத் தடாகம் (1966),
  • வேலிக்குப் போட்ட முள் (1966),
  • பஞ்சாமிர்தம் (1967),
  • அடுத்த வீட்டு அக்கா (1968),
  • அது அப்படித்தான் - நகைச்சுவை (1968), 
  • ஆத்ம தரிசனம் (1968),
  • குருவிக் கூடுகள் (1969),
  • படைத்தவனைப் படைத்தவர்கள் (1970), 
  • வெற்றிலை மாலை (1970),
  • மாமியார் வீடு (1970),
  • பொழுது விடிஞ்சா தீபாவளி (1970),
  • தேடிவந்த தெய்வங்கள் (1970),
  • ஆறும் நாறும் (1971),
  • பொழுதலைக் கேணி (1971),
  • வேரில் பழுத்த பலா, (1973),
  • அந்த ஒரு விநாடி? (1974),
  • போடியார் வீட்டு பூவரசு (1974),
  • நெருஞ்சிப் பூக்கள் (1975),
  • குடும்பம் ஒரு கோயில் (1977),
  • இருளில் இருந்து விளக்கு (1977),
  • எல்லாம் உனக்காக (1978),
  • கடன்படு திரவியங்கள் (1978),
  • சொர்க்கத்தின் வாயிலில் நரகத்தின் நிழல்கள் (1980),
  • ஆனந்தக் கூத்தன் (1980),
  • மனமே மாமருந்து (1980),
  • மன்னிக்க வேண்டுகிறேன் (1981),
  • சேவை செய்தாலே வாழலாம் (1981), 
  • தெய்வங்கள் வாழும் பூமி (1982),
  • ஒற்றுமையே உயர்த்தும் ஏணி (1984),
  • தொடரா முறிகள் (1985),
  • கவலைகள் மறப்போம் கலைகளை வளர்ப்போம் (1986),
  • நம்பிக்கைதான் நல்வாழ்வு (1992),
  • நல்லவையே வல்லவை (1992),
  • உன்னுள் ஒருவன் (1993),
  • வேண்டாம்… வேண்டவே வேண்டாம் (1994), 
  • என்றென்றும் மலரவேண்டும் மனிதாபிமானம் (1995),
  • இறைகாக்கும் (1995),
  • பாடசாலையும் சமூகமும் (2007)
ஆரையூர் இளவலின் ‘மண் சுமந்த மகேசன்' (மாணிக்கவாச சுவாமிகளின் சரிதம்) சின்னத்திரை வீடியோ நாடகமாகும். இந்நாடகத்தின் உள் அரங்கக் காட்சிகள் மட்டக்களப்பு ஆரையம் பதியிலும், வெளிப்புறக் காட்சிகள் மண்முனைப் பிரதேசத்திலும் படம் பிடிக்கப்பட்டன. 1980ஆம் ஆண்டு 06 மாதம் 27ஆம் திகதி மாணிக்கவாசகர் சுவாமிகள் குருபூசை தினத்தன்று இந்நாடகம் முதலாவது காட்சிக்கு விடப்பட்டு தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் ஆலய அரங்குகளிலும், பொது அரங்குகளிலும் காட்சியாக்கப்பட்டது.

கிழக்கிலங்கையில் முதல் முயற்சியென போற்றப்படும் இந்த சின்னத்திரை வீடியோ நாடகத்தினை கதை, வசனம், பாடல்கள், நெறியாள்கை செய்தவர் ஆரையூர் இளவலே.

நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ள இவர் இதுவரை 12 நாடகங்களில் நடித்துமுள்ளார்.

" கஸ்டப்படுவோர் முகம் மலர
கவலைப்படுவோர் அகம் குளிர
கடிந்துவரும் இன்னல்களை
இன்பங்களாக மாற்றிப் பணி புரிவோம். "

எனும் நோக்குடன் கலைத்துறை சேவையாற்றி வரும் இவரின் ‘அலங்கார ரூபம்' (தென்மோடி) 1971'  ‘சுபத்திரா கல்யாணம்' (வடமோடி) 1972 ஆகிய நாட்டுக்கூத்துகள் மக்கள் மத்தியில் ஜனரஞ்சகத்தன்மை பெற்றது. இவ்விரு நாட்டுக்கூத்துப் பாடல்களும் 1974ஆம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தினால் ஒலிப்பதிவு செய்யப்பட்டு மூன்று முறை ஒலிபரப் பியமை குறிப்பிடத்தக்கது.

இலக்கியத்துறை

நாடகத்துறையைப் போலவே இலக்கியத்துறையிலும் இவர் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்துள்ளார். இவரின் கன்னியாக்கம் ‘ஐந்து தலை நாகம்' எனும் தலைப்பில் 1952ம் ஆண்டு ‘சுதந்திரன்' பத்திரிகையில் பிரசுரமானது. அதிலிருந்து இதுவரை இருபத்தைந்து சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ள இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், இரண்டு நாவல்களையும் எழுதி யுள்ளார்.

அதேநேரம், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சமய, இலக்கிய சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. செல்லத்தம்பி அவர்கள் ஆரையூர் இளவர், ஆரையூர் இறை யடியான் ஆகிய பெயர்களிலும் எழுதி வருகின்றார்.

இவர் இதுவரை இரண்டு நூல்களை எழுதி வெளியிட் டுள்ளார்.

01.     ‘விபுலானந்தர் வாழ்கின்றார்.'

புனித செபஸ்டியன் அச்சகத்தில் அச்சிடப்பட்ட இக் கவிதை நூல் ‘ஆரையம்பதி ஸ்ரீமுருகன் இந்துமன்ற' வெளியீடாக 1991.09.27ஆம் திகதி வெளிவந்தது. இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கவிதைகளும்  இசைவடிவில் பின்பு இருவட்டுக்களாகவும் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

விபுலானந்தர் வாழ்கிறார் நூலுக்கு ஆசியுரை வழங்கி யுள்ள ‘ஸ்ரீராமகிருஸ்ண மிஸ்ன்' (இலங்கைக்கிளை), அருட்திரு. சுவாமி ஜீவனானந்த அடிகளார் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட் டிருந்தார்.

 “நம் ஈழமணித் திருநாடு அந்நியரின் ஆட்சிக்குட்பட்டு   நம்மவர்கள் அனைவரும் இருள் சூழ்ந்த வாழ்க்கை  வாழ்ந்த அண்மைக்காலத்தில் அவர்களுக்கு அறிவெனும்  சுடர் ஏற்றி ஒளிகொடுக்க வந்த பெருமக்களுள் ஒப்பற்றவர்         சுவாமி விபுலானந்த அடிகளாராவார்.

 சமூகத்திற்காக தமது வாழ்வை அர்ப்பணித்து சமூகத்தை  நன்னெறியில் இட்டுச் செல்லும் வெவ்வேறு பணிகளில்  பங்கெடுத்து சமூக மேம்பாட்டிலேயே கண்ணும் கருத்தும்  நிறைந்தவராக விளங்கிய சுவாமிகளை அன்னாரின்  பிறந்த நூற்றாண்டாகிய  இக்காலப் பகுதியில் கற்றோரும்,         இலங்கையில் ஆரையம்பதி, ஸ்ரீமுருகன் மன்றத்தினர்  அடிகளாரின் நினைவு எல்லோர் உள்ளத்திலும்   நிலைத்திட வேண்டும் எனும் பேரெண்ணத்துடன் கவிஞர் ‘ஆரையூர் இளவல்' சுவாமிகளின் நூற்றாண்டாகிய  இக்காலப் பகுதியில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இவர்  இயற்றிப் பாடிய பாடல்களை ஒன்றாகத் தொகுத்து   “விபுலானந்தர் வாழ்கின்றார்' எனும் தலைப்பில் நூல்         வடிவில் வெளிக்கொணர முயன்று வருவதை அறிந்து         மகிழ்ச்சியடைகிறேன்.'

02.     நீறு பூத்த நெருப்பு 

புராணம், இத்திகாசம், சமூகம் ஆகிய மூன்று தர நாடகங் களின் தொகுப்பு நூல் இதுவாகும். 1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி இந்நூலின் முதலாம் பதிப்பு வெளிவந்தது. மட்டக்களப்பு புனித வளவனார் கத்தோலிக்க அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்த இந்நூல் அன்பு வெளியீடாகும்.

மேலும் ஐந்து நூல்களை விரைவில் வெளியிடக்கூடிய நடவடிக்கையை மேற் கொண்டுள்ளார் என்பது மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு விடயம். அவை பின்வருமாறு:

01.    ‘இறை காக்கும்' (நாடகங்கள்) தொகுப்பு நூல்
02.    ‘கோடு கச்சேரி' (நாவல்)
03.    ‘மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கும் கிராமங்கள்'
04.    ‘வாழ்ந்தது போதுமா?' (சிறுகதைகள் தொகுப்பு)
05.    ‘இனிக்கும் நினைவுகளே இங்கே வாருங்கள்' (வரலாறு).
(அறுபது ஆண்டுக்கலை இலக்கியப் பொதுப் பணிகளில் நெஞ்சம் நெகிழ்வித்த இனிய நல் நிகழ்வுகள்)

இவரின் இத்தகைய பணிகளை கௌரவித்து பல சுயேச்சை நிறுவனங்களும், அரச நிறுவனங்களும் பல்வேறுபட்ட விருதுகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்கா அரசினால் வழங்கப்படும் உயரிய விருதான
 ‘கலாபூசணம்' விருது இவருக்கு 2007ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.     ஏழு தசாப்தங்களை கடந்த நிலையில் இன்னும் கலைத் தாய்க்கு கலைப்படைப்புக்களை வழங்கி வரும் ‘ஆரையூர் இளவல் க. செல்லத்தம்பி' தனது கலைத்துறை ஈடுபாட்டுக்கு காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் சுவாமி விபுலானந்த அடிகளாரையும், மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் சிரேஸ்ட விரிவுரையாளர் பண்டிதர் செ. பூபால பிள்ளை அவர்களையும், மூத்த எழுத்தாளரும், முன்னாள் மட்டக் களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் இரா. நாகலிங்கம் அவர்களையும் இன்றும் அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவரின் முகவரி:-

K. SELLATHAMBY
THAVAPATHY
ARAYAMPATHY 01,
BATTICALOLA.