ஞாயிறு, 16 ஜனவரி, 2011

கே. ஞானசெல்வம் மகாதேவா

வட மாகாணம், யாழ்ப்பாண மாவட்டம், யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர் பிரிவில் கோண்டாவில் மேற்கு கிராமசேவகர் வசத்தில் வசித்துவந்த கே. ஞானசெல்வம்  மகாதேவா அவர்கள் ஒரு சிரேஸ்ட பத்திரிகையாளராவார்.

அரை நூற்றாண்டுகளுக்கு மேல் பத்திரிகைத் துறையில் தடம்பதித்து பத்திரிகைத் துறையையே தனது மூச்சாகக் கொண்டுள்ள கே. ஜி. மகாதேவா தற்போது குடும்பத்துடன் புலம்பெயர்ந்து இந்தியாவின் தமிழ்நாடு,  திருச்சியில் வசித்து வருகின்றார். பத்திரிகைத்துறையைப் போலவே எழுத்துத்துறையிலும் இவர் தடம்பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கே. ஜி. மகாதேவா, கே. ஜி. எம்,  மகான், ஊடுருவி,  மகள் சாந்தா ஆகிய பெயர்களிலும் எழுதி வருகின்றார்.

கே. ஞானசெல்வம், என். கனகம்மா தம்பதியினரின் புதல்வராக 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி மட்டக்களப்பில் பிறந்த மகாதேவா தனது ஆரம்பக் கல்வியை ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையிலும் பின்பு இடைநிலை உயர்தரக் கல்வியை மட்டக்களப்பு மத்திய கல்லூரி, மட்டக்களப்பு அரசினர் கல்லூரி, யாழ்ப்பாணம் ஸ்டான்லி கல்லூரி ஆகியவற்றில் பெற்றுள்ளார்.

தற்போதும்  ஒரு சுதந்திரப் பத்திரிகையாளரான இவரின் அன்புப் பாரியார் பத்மமீனா மகாதேவா ஆவார். ''பானை பிடித்தவள் பாக்கியசாலி" என்பார்கள். மகாதேவா வாழ்க்கையில் 'பேனா பிடித்தவள் பாக்கியசாலி' ஆனார். 1958 இல் வீரகேசரி இதழில்  வெளிவந்த மகாதேவாவின் கட்டுரையைப் பாராட்டி ஒரு பெண்ணிடமிருந்து கடிதம்  இவரது கல்லூரி விலாசத்துக்கு வந்தது. இதுவே பின்னர் பேனா நட்பாகி,  இரண்டு ஆண்டுகள் இருவரும் சந்திக்காமலேயே காதலாக கடிதம் மூலம் மலர்ந்து பின்னர் சந்தித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  மகாதேவா - பத்மமீனா தம்பதியினருக்கு சாந்தா, ஞானக்குமார், சந்திரிகா, ராஜேந்திரன், ராஜ்குமார், கோவதனி ஆகிய ஆறு அன்புச் செல்வங்களுள்ளனர்.

இவரது மாணவர் பருவத்தில் 11வது வயதிலே இவரின் கன்னியாக்கம் 1951ஆம் ஆண்டில் ஈழகேசரியில் வெளியாயிற்று. ‘இரத்தத்தில் கையெழுத்திட்டு பிரதமருக்கு  மாணவர் மகஜர்’ எனும் தலைப்பில் பிரசுரமானது. இவரது முதல் செய்தி ‘தமிழரசுக் கட்சியின் சத்தியாக்கிரகம்' எனும் தலைப்பில் 1961ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையில் பிரசுரமானது. இவற்றைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான ஆக்கங்களையும், விமர்சனங்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும், விமர்சனக்கட்டுரைகளையும் இவர் ஈழத்து, இந்திய தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதியுள்ளார்.

1951 முதல் 1954 வரை யாழ். ஈழகேசரியில் தான் எழுதிய குட்டிக்கதைகளை இன்றும் ஞாபகப்படுத்துவதில் மகிழ்ச்சியடையும் இவர், தனது மாணவர் பராயத்திலே ஈழகேசரியில் சின்னச் சின்ன செய்திகளையும் எழுதியுள்ளார்.  இவ்வாறாக சிறு வயதிலிருந்தே எழுத்துத் துறையில் ஈடுபட்டு வந்த மகாதேவா 1958ஆம் ஆண்டில் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த தமிழகம் வார இதழில் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்லையா ராசதுரை மற்றும் காசி ஆனந்தன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். பத்திரிகைத்துறையில் இவரின் பங்களிப்பு தமிழகம் வார இதழிலே ஆரம்பித்தது.

இதையடுத்து 1961ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த பிரபல பத்திரிகையான ஈழநாட்டில் செய்திப்பிரிவில் இணைந்து 1972 இல் இருந்து செய்தியாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.  1961ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை யாழ். ஈழநாட்டில் கடமையாற்றினார். இக்காலகட்டத்தில் - இடையே 1967 முதல் 1972ஆம் ஆண்டுவரை கண்டியில் இருந்து வெளிவந்த ‘செய்தி’ வார இதழிலும் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

1961 முதல் 1990 வரை முழுநேரப் பத்திரிகையாளராக தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை கழித்த இவர், பல்வேறு பட்ட பிரச்சினைகள், இடையூறுகள் மத்தியிலும் தொடர்ந்து வந்தார். 1989ம் ஆண்டில் தான் பணியாற்றிய ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் குண்டு வீச்சிக்கு இலக்கானதையடுத்து மனதளவில் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கும் சில இயக்கங்களின் கொலை அச்சுறுத்தல் காரணமாகவும் புலம்பெயர்ந்து இந்தியாவுக்குச் சென்றார். அதன் பின்பு முழுநேரப் பத்திரிகையாளர் பணியிலிருந்து ஒதுங்கி தற்போது லண்டனிலிருந்து வெளிவரும் புதினம் சஞ்சிகையின் தமிழக செய்தியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.

முழுநேரமாக பணியாற்றும்போது ஒரு பத்திரிகையிலேயே தமது பணியை வரையறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், பகுதிநேரமாக அப்பணியை மாற்றி ஒரு சுதந்திர பத்திரிகையாளனாக செயற்படும்போது கட்டுப்பாடுகளுக்கப்பால் சுயமாக கருத்துகளை வெளியிடக் கூடியதாக இருக்குமென குறிப்பிடும் மகாதேவா தற்போது ‘தினக்குரல்’ பத்திரிகைக்கும் அவ்வப்போது செய்திக் கட்டுரைகளை எழுதி வருவது குறிப்பிடத் தக்கது.

ஈழநாடு பத்திரிகையில் இவர் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டங்களில் 1981ஆம் ஆண்டு அரச கமான்டோ படையினரால் பத்திரிகை காரியாலயம் எரிக்கப்பட்ட நேரத்திலும், 1989ஆம் ஆண்டில் ஈழநாடு குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகிய நேரத்திலும் தான் கடமையிலீடுபட்டிருந்ததாகவும் அச்சம்பவங்களின்போது உயிர்பிழைத்தது மயிரிழையில் என்றும் அந்தக் கசப்பான அனுபவங்களை தற்போதும் இடைக்கிடையே ஞாபக மூட்டிக் கொள்வதுண்டு.

இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நேரத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஈழநாட்டிற்கு அளித்த பேட்டியை பிரசுரித்திருந்தது.  அப்பேட்டி தவறான கருத்துக்களுடன் மொழிபெயர்க்கப்பட்டு இலங்கை ரூபவாஹினியில் மும்மொழிச் செய்திகளிலும் ஒளிபரப்பப்பட்டது. இது குறித்து திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு தெரிவித்த புகாரையடுத்து இலங்கை வான்படையினர் தனி விமானம் மூலம் யாழ்ப்பாணத்திலிருந்து விசாரணைக்காக மகாதேவா கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மூல பேட்டிக்கும், ரூபவாஹினியில் ஒளிபரப்பப்பட்ட பேட்டிக்கும் இடையே காணப்பட்ட கருத்துப் பிழைகளைச் மகாதேவா விளக்கமாக சுட்டிக்காட்டிய பின்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா முறைப்பாட்டை வாபஸ் பெற்றுக் கொண்டார். தன்னுடைய ஊடகத்துறை அனுபவத்தில் ஒரு மறக்க முடியாத நினைவாக இச்சம்பவத்தை 2004ஆம் ஆண்டில் இவரால் வெளியிடப்பட்ட ‘நினைவலைகள்’ நூலில் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். 

கே.ஜி. மகாதேவா இதுவரை இரண்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். 2004ம் ஆண்டில் நினைவலைகள் எனும் தலைப்பில் சென்னை 24 கோடாம்பாக்கம், ஆற்காடு வீதியைச் சேர்ந்த மித்ர பப்ளிகேசன் இப்புத்தகத்தை வெளியிட்டிருந்தது. 212 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் தன்னுடைய சுயவாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களை அவர் எழுதியிருந்தார். குறிப்பாக இப்புத்தகத்தில் அவருடைய பத்திரிகைத்துறை வாழ்க்கை அனுபவங்கள் சுவைப்பட எழுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதே புத்தகம் 2005ம் ஆண்டில் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு Raminiscences  எனும் தலைப்பில் 139 பக்கங்களுடன் வெளிவந்தது.

2007ம் ஆண்டில் கதையல்ல நிஜம் எனும் தலைப்பில் இவரது இரண்டவது புத்தகம் வெளிவந்தது. இப்புத்தகத்தையும் சென்னை 24 கோடாம்பாக்கம், ஆற்காடு வீதியைச் சேர்ந்த மித்ர பப்ளிகேசன் வெளியிட்டிருந்தது. 232பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் தான் பணியாற்றிய ஈழநாடு பத்திரிகையில் தன்னால் நாள்தோறும் எழுதப்பட்ட ‘இப்படியும் நடக்கிறது’ எனும் பத்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்புக்களை சேர்த்திருந்தார்.

முடியுமானவரை எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே இலட்சியம். இதனுடன், ஆண்டுதோறும் ஒருநூல் வெளியிடவேண்டும் என்பது என் குறிக்கோள். வரலாற்றுப் பதிவில் ஈழநாடு எனும் எனது நூல் அடுத்த ஆண்டு வெளிவர இருக்கிறது. பல்கலைக்கழக மட்டத்தில் பத்திரிகைத்துறையில் இந்நூல் உதவவேண்டும் என்பது எனது எதிர்ப்பார்ப்பு என்று கூறும் இவர் தனது எழுத்துத்துறை ஈடுபாட்டுக்கு காரணமாக இருந்த வர்கள் என்றடிப்படையில் தனது சிறிய தந்தை மகா வித்துவான் வி.சீ. கந்தையா மற்றும் திருமதி கங்கேஸ்வரி கந்தையா, புலவர்மணி அ. பெரிய தம்பிப்பிள்ளை ஆகியோரை இன்றும் அன்புடன் நினைவுகூர்ந்து வருகின்றார்.

இவரின் முகவரி:-
K.G. MAHADEVA,
5, 8th CROSS,
THIRUNAGAR,
KARUMANDAPAM,
TIRUCHIRAPALLI – 620001,
TAMILNADU

1 கருத்து:

  1. பயன்மிகு தகவலுக்கு வாழ்த்துப்பூத்தூவல்கள்!
    குறித்த எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்களின் நிழற்படங்களையும் ,இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா?
    -கலைமகன் பைரூஸ்

    பதிலளிநீக்கு