வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

டாக்டர் ஞானசேகரன்

மேல் மாகாணம்,  கொழும்பு மாவட்டம்,  வெள்ளவத்தை கிராமசேவகர் பிரிவில் வசித்துவரும் டாக்டர் ஞானசேகரன் அவர்கள் நாடறிந்த ஒரு எழுத்தாளரும், சஞ்சிகையாசிரியருமாவார்.

1941ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி தியாகராசா ஐயர் - வாலாம்பிகை தம்பதியினரின் புதல்வராக யாழ்ப்பாண மண்ணில் பிறந்த இவர், புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ் பாடசாலை, உரும்பராய் இந்துக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தற்போது ஒரு டாக்டராக பணியாற்றி வருகின்றார். இவரின் அன்புப் பாரியார் ஞானலட்சுமி. இவர் இளைப்பாரிய ஆசிரியை. இத்தம்பதியினருக்கு இராஜேஸ்வரன்,  வசுந்தரா,  பாலசந்திரன் ஆகிய அன்புச் செல்வங்களுளர்.

இவரது இளம் வயது முதல் இவர் ஓர் இலக்கியச் சூழலில் வளர்ந்தவர். தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய வித்துவசிரோமணி சி. கணேசையர் இவரின் பூட்டனார். நல்லூரில் ஆதினம் அமைத்து தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றிய சுவாமி நாதர் தம்பிரான் சுவாமிகள் இவரது தாய் மாமா. இவர்களைவிட இவரது உறவினர் பலர் பழந்தமிழ் இலக்கியங்களில் பரிச்சயம் உள்ளவர்களாக இருந்தனர். எந்தவொரு சம்பவத்தையும் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து எடுத்துக் காட்டுக்களுடன் விளக்கி இலக்கியச் சுவையுடன் பேசவல்ல பலர் இவரின் உறவினர்களாக இருந்தனர். இவர்களின் சிலர் கோவில்களில் புராண படனங்களுக்குப் பயன் சொல்வதில் வல்லமை பெற்றிருந்தனர்.

இதன் காரணமாக இவருக்கு இளம் வயதிலே பழந் தமிழ் இலக்கியங்களில் பரிச்சயம் ஏற்பட்டது. பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே இவரது தாயார் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்துள்ளார். அக்கால கட்டங்களில் கல்கி, ஆனந்தவிகடன், கலைமகள் போன்ற சஞ்சிகைகளை வாசிக்கத் தொடங்கிய இவர், கல்கி,  அகிலன், சாண்டில்யன்,  ஜெயகாந்தன், மு.வ.,  புதுமைப்பித்தன் ஆகியோரின் படைப்புகளை ஆர்வத்துடன் வாசித்து வந்தார். இதனால் இவர்களைப் போல தானும் கதைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு இளம் வயதிலேயே ஏற்பட்டது.

இந்தியாவிலிருந்து  கண்ணன் என்ற சிறுவர்களுக்கான சஞ்சிகையொன்று அக்காலகட்டத்தில் வெளிவந்து கொண்டிருந்தது. பள்ளிப் பராயத்தில் அச்சஞ்சிகைக்கு சிறு துணுக்குகள், வாசகர் கடிதங்கள் போன்றவற்றை அடிக்கடி எழுதி வந்தார். இவை பிரசுரமானதும் இவருள் எழுத வேண்டும் என்ற உத்வேகம் மேலும் மேலும் அதிகரித்தது.

இந்த அடிப்படையில் 1964ஆம் ஆண்டில் கலைச்செல்வி எனும் சஞ்சிகையில் பிழைப்பு எனும் தலைப்பில் இவரது முதலாவது சிறுகதை பிரசுரமானது. தொடர்ந்து பல சிறுகதைகளை இலங்கையில் வெளிவந்து கொண்டிருந்த வாரப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதினார். இந்தியாவிலிருந்து வெளிவரும் தரம் வாய்ந்த தமிழிலக்கிய சஞ்சிகையான கலைமகளிலும் இவரின் சில கதைகள் பிரசுரமாகியுள்ளன. இதுவரை 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள்,  கட்டுரைகள்,  நூலாய்வுகள் என இவர் எழுதியுள்ளார். டாக்டர் ஞானசேகரன் அவர்கள் இதுவரை ஒன்பது நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 

01.    காலதரிசனம்
1973ல் வெளியானது. 12 சிறுகதைகள் அடங்கிய இச்சிறுகதைத் தொகுதிக்கு பேராசிரியர் க. கைலாசபதி முன்னுரை எழுதியிருந்தார். இம்முன்னுரையில் பேராசிரியர் நூலாசிரியர் தி. ஞானசேகரன் அவர்களைப் பற்றி குறிப்பிடும்பொழுது,  மன விகசிப்பும், கலைமெருகும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் வளர்ச்சிபெற்ற சிறுதை ஆசிரியர் என்றார். (15.04.1973)

02.    புதிய சுவடுகள்
1977ல் எழுதிய முதல் நாவல் வெளியாகியது. வீரகேசரி அக்காலத்தில் ஒரு நாவல் போட்டியை நடத்தியது, அதற்கென எழுதப்பட்டதே இந்த நாவல். பின்னர் இந்நாவல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது. இந்நாவல் அந்த ஆண்டுக்கான அரச சாகித்திய விருதினைப் பெற்றது. இந்நாவல் பற்றி பேராசிரியர் சு. வித்தியானந்தன்  ஆழமான சமுதாயப் பார்வையில் வீசி நிற்கும் இவரது நாவல் சுபிட்சமும், செழுமையும் நிறைந்த புதியதொரு காலத்தை தருசித்து நிற்கின்றது (06.03.1978) என்றும், பேராசிரியர் க. அருணாசலம்  யாழ்ப்பாண மண்ணுக்கே சிறப்பாகவுரிய பிரச்சினையொன்றினை அதற்குரிய காரணிகளை அறிவுபூர்வமாக அணுகி உணர்ச்சிபூர்வமாக திட்டமிட்ட கதையும், சத்துடன் புதிய சுவடுகள் நாவல் படைக்கப் பட்டுள்ளது. சமுதாயத்தின் ஊழல்களையும், போலித் தனங்களையும்,  மாறிவரும் கருத்தோட்டங்களையும் இந்நாவல் சித்தரிக்கின்றது (15.03.1980) என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

03.    குருதிமலை
1979ல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது. அவ்வாண்டுக்கான சாகித்திய விருதினைப் பெற்றது. இதுவொரு மலையக நாவல். தான் மலையகத்தில் வைத்திய அதிகாரியாகத் தொழில் புரிந்ததால் அங்கு பெற்ற அனுபவம் இந்த நாவலை எழுதத் தூண்டியுள்ளது. இந்நாவல் தகவம் பரிசினையும் பெற்றுக் கொண்டது. 1986ல் ஈழத்தில் அதுவரை வெளிவந்த ஆக்க இலக்கியங்களில் நாவல் சார்ந்த சிறந்த நூல்களில் ஒன்றென இலங்கை இலக்கியப் பேரவையின் சான்றிதழையும்  பெற்றது. இந்நாவல் பற்றி கலாநிதி நா. சுப்பிரமணியம் 1988 மல்லிகை இதழில் பின்வருமாறு எழுதியிருந்தார்.  கதைசொல்லும் முறையிலும், தொழிலாளருது பண்பாட்டுக் கோலங்களைக் காட்டும் முறையிலும் ஞானசேகரன் அவர்களது ஆற்றல் விதந்து பாராட்டத்தக்கது. இதுவொரு இலக்கியம் என்ற வகையில் மட்டுமன்றி மலையக மக்களின் ஒரு காலகட்ட வரலாற்று ஆவணம் எனத்தக்க தகுதியும் பெற்றுள்ளது. பேரினவாதத்திற்குப் பணியாத தமிழுணர்வின் முதற்கட்ட வெற்றிற்கு கட்டியம் கூறிநிற்கும் படைப்பு இது எனலாம்

மதுரை அமெரிக்கன் கல்லூரி விரிவுரையாளர் செ. போத்திரெட்டி குருதிமலை என் உள்ளத்தை பிணித்த உன்னத படைப்பு. அந்நாவலை அக்கரைத் தமிழ் எனும் முதுகலைத் தாள் ஒன்றிற்கு பாடநூலாக வைக்க முடிவு செய்துள்ளோம். என்றார். இந்த அடிப்படையில் 1992ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.ஏ. பட்டப் படிப்பிற்குப் பாடநூலாகத் தெரிவுசெய்யப்பட்டது. இந்நாவல் 3 பதிப்புக்களைப் பெற்றுள்ளது. மேலும்,  இந்நாவல் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு சிங்கள வாசகர்கள் மத்தியிலும் எழுத்தாளரை அறிமுகம் செய்து வைத்துள்ளது. 

04.    லயத்துச்சிறைகள் - (குறுநாவல்) 
லயத்துச்சிறைகள் 1994ல் வெளிவந்தது. மலையக நாவல். 1995ல் சிறந்த நாவலுக்கான மத்திய மாகாண கலாசார அமைச்சின் சாகித்திய மண்டலப்பரிசு பெற்றது. இலங்கை இலக்கியப் பேரவை யின் சிறந்த நாவலுக்கான சான்றிதழையும் பெற்றுள்ளது.

இந்நூல் பற்றி பேராசிரியர் எஸ். தில்லைநாதன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “மலையக மக்கள் தங்களது எதிர்கால வாழ்க்கைக்குத் தயார் செய்துகொள்ள,  தமது சொந்தக் காலிலே நிற்கவேண்டுமென்ற நிதர்சன உண்மையை இந்த ‘லயத்துச் சிறைகள் நாவல் வெளிப் படுத்துகின்றது. தோட்டப் பிரதேசத்திலேயே வாழ்ந்து அவர்களது யதார்த்தங்களை மிகத் தெளிவாக அறிந்தா இந்த நாவலை படைத்திருக்கிறார் நூலாசிரியர்? அவரது படைப்பாற்றல் பாராட்டுக்குரியது என்றார்.

05.    கவ்வாத்து – குறுநாவல்
(1996) தேசிய கலையிலக்கியப் பேரவையும், சுபமங்களாவும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசுபெற்றது. ‘விபவி கலாசார மையத்தின் 1996ல் வெளிவந்த சிறந்த படைப்பிற்கான ‘தங்கச்சங்கு விருதும், சான்றிதழும் பெற்றது. மத்திய மாகாண சாகித்திய விருதினையும் பெற்றது.

இந்நூல் பற்றி பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “திரு. ஞானசேகரனின் இந்தக் குறுநாவல், மலையகப் பெருந்தோட்ட தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினையை நோக்குகிறது. அது தொழிற்சங்கங்களின் பயன்பாடு என்பதாகும். எந்தத் தொழிற்சங்க இயக்கம் அவர்களின் சமூக – பொருளாதாரத் தனித்துவங்களை உணர்ந்த அவர்களின் “நல்வாழ்க்கைக்குப் போராடிற்றோ,  இன்று அதே அந்த மக்களின் ஒற்றுமையின்மைக்கு வழிவகுக்கும் சமூகக் கருவியாக மாறியுள்ள நிலைமையை இந்தக் குறு நாவலிலே காண்கிறோம். மலையகப் பெருந்தோட்டத் தமிழர்களை எதிர்நோக்கி நிற்கும் (இன்றைய) மிகப் பெரிய சவால் இது… இந்தப் பிரச்சினையின் ஒரு வெட்டுமுகத்தை ஒரு வன்மையான முனைப்புடன் இந்தப் படைப்புத் தருகின்றது என்றார்.

இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குறுநாவல்களுள் 1995ஆம் ஆண்டு தமிழக சுபமங்கள சஞ்சிகை நடத்திய ஈழத்து குறுநாவல் போட்டியில் பரிசும், பாராட்டும் பெற்ற கதையொன்று இடம்பெற்றுள்ளது.

06.    அல்சேசனும் ஒரு பூனைக் குட்டியும்
அல்சேசனும் ஒரு பூனைக் குட்டியும் (1998) (சிறுகதைத் தொகுதி). தற்போது இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் B.A வகுப்பிற்குரிய பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் பற்றி பேராசிரியர் க. அருணாசலம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “திரு. ஞானசேகரன் அவர்கள் கதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி உருவ அமைதியிலும் தீவிர கவனம் செலுத்தியுள்ளமையை அநேகமாக எல்லாக் கதைகளிலும் காணமுடிகிறது. உள்ளடக்கங்களுக்கேற்ற மிகப் பொருத்தமான தலைப்புகள், உயிர்த்துடிப்புமிக்க நடை மிகப்பொருத்தமான கதைத் திருப்பங்கள், சிந்தனையைத் தூண்டும் முடிவுகள்,  பண்புநலனை வெளிப்படுத்தும் பாத்திர வார்ப்புகள், உவமைப் பிரயோகங்கள், கச்சிதமான வருணனைகள் முதலிய அவரது கதைகளுக்குத் தனிச்சோபையை அளிக்கின்றன என்றார்.

07.    தி. ஞானசேகரன் சிறுகதைகள். 30 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 2005ல் வெளியானது. 2005ம் ஆண்டில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிக்கான நாவேன்தன் விருதினைப் பெற்றது.

08.    புரிதலும் பகிர்தலும் (2003) அவுஸ்திரேலிய எழுத்தாளர்களுடனான நேர்காணல் 09.    அவுஸ்திரேலியப் பயணக்கதை (2002) பயண இலக்கிய தொகுதி.

டாக்டர் ஞானசேகரன் அவர்களின் எழுத்துகள் பலவழிகளிலும் முத்திரைப் பதித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இவரது கதைகள் சமூகமயமானவை. சமூக யதார்த்தங்களை வெளிப்படுத்தக்கூடியவை. அத்துடன்,  பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய வகையில் கருத்துக்களை கதை வடிவிலே முன்வைத்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும். 

ஞானம் சஞ்சிகை

டாக்டர் ஞானசேகரன் அவர்களின் இலக்கியப் பணிகளில் 2000ஆம் ஆண்டுக்குப் பின்பு உச்சமாகத் திகழ்வது  ஞானம் சஞ்சிகை என்றால் மிகையாகாது. பகிர்தலின் மூலம் விரிவும், ஆழமும் பெறுவது ‘ஞானம் எனும் பணிக்கூற்றுடன் தொடர்ந்து மாதந்தோறும் வெளிவரும் ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் டாக்டர் ஞானசேகரன் அவர்கள். அதன் இணையாசிரியர்: ஞானம் ஞானசேகரன்.

ஞானத்தின் முதலாவது இதழ் 2000.06.06இல் வெளிவந்தது. ஒரு சஞ்சிகையானது அந்த நாட்டின் இலக்கியப் பாரம்பரியங்கள்,  இலக்கிய உலகில் ஏற்படும் மாற்றங்கள்,  வளர்ச்சிப் போக்குகள்,  கருத்தோட்டங்கள் போன்றவற்றின் காலக் கண்ணாடியாக திகழ வேண்டும். புதிய எழுத்தாளர்கள் தோன்றி வளர வேண்டும். இக்கருத்தியலுக்கமையவே ஞானம் சஞ்சிகையின் உள்ளடக்கங்களிலும்,  செயற்பாடுகளிலும் கவனம் செலத்தி வருவது அவதானிக்க முடிகின்றது. எமது நாட்டில் சென்ற நூற்றாண்டு 60, 70கள் இலக்கிய செயற்பாடுகளில் உன்னத காலமாக விளங்கியது. முற்போக்கிலக்கியம், நற்போக்கிலக்கியம், மரபு பற்றிய சர்ச்சைகள் முன்னெடுக்கப்பட்ட காலம் அது. அக்காலகட்டத்தில் தோன்றிய சிற்றிதழ்கள் - மறுமலர்ச்சி,  கலைச்செல்வி,  மல்லிகை,  குமரன்,  இளம்பிறை,  சிரித்திரன்,  விவேகி, மரகதம், தேன் அருவி,  மலர்,  மலைமுரசு,  நதி,  அலை,  தீர்த்தக்களை,  அஞ்சலி, நந்தலாலா போன்றவையும் வேறும் சிலவும் இலக்கியப் பணி புரிந்தன.
   
எண்பதுகளில் தோன்றிய போர்ச்சூழல் காரணமாக எமது படைப்பாளிகள் பலர் நாட்டைவிட்டும் புலம்பெயர்ந்தனர். மேலும் பலர் நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தனர். வாழ்க்கைப் பிரச்சினைகள் பலவாயின. சுதந்திரமாக இயங்க முடியாத சங்கடம். இவை யாவும் எமது படைப்பாளிகளின் படைப்புச் செயற்பாட்டில் ஆர்வம் குறைந்த நிலைமையை தோற்றுவித்தன. வாசிப்புப் பழக்கம் இளைய தலைமுறையிடம் அருகத் தொடங்கிற்று.

ஆனாலும்,  இலக்கியச் செயற்பாடுகள் காலத்துக்குக் காலம் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியது அவசியமானது. இன்று மிகவும் சிரமமான ஒரு சூழ்நிலையிலேயே நாம் இப்பணி யில் ஈடுபட்டுள்ளோம். முன்னைய இலக்கிய சஞ்சிகைகள் ஆற்றிய இலக்கியப் பணியின் தொடர்ச்சியைப் பேணி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம் என்ற உணர்வுடன் செயல்படுவது இன்றியமையாத தேவையாகின்றது. அந்த உணர்வுடனே நாம் செயல்பட்டு வருகின்றோம் என டாக்டர் ஞானசேகரன் அவர்கள் ஞானம் 100வது இதழில் குறிப்பிட்டிருந்தார்.

உண்மையிலேயே தற்போதைய காலசூழ்நிலையை பின்னணியாகக் கொண்டு நோக்குமிடத்து ஒரு இலக்கிய சஞ்சிகையை தொடர்ச்சியாக வெளியிடுவதில் உள்ள சிரமம் அனைவரும் அறிந்ததே. மாதந்தோறும் தவறாமல் ஞானம் சஞ்சிகையை வெளியிடுவதினூடாக ஞானசேகரன் ஒரு புதிய சாதனையைப் படைத்து வருகின்றார் என்றால் மிகையாகாது.

டாக்டர் ஞானசேகரன் அவர்களின் புகைப்படத்தை தனது முகப்பட்டையில் பிரசுரித்து 1998 அக்டோபர் கொழுந்து சஞ்சிகை கௌரவத்தை வழங்கியது. அதேபோல 1998 ஏப்ரல் அட்டைப்பட அதிதியாக மல்லிகை சஞ்சிகையும் இவரை கௌரவித்தது. இலக்கியத்தில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தாலும் கர்வமின்றி பழகுவதற்கு இனிமையான சுபாவமுள்ள இவரின் முகவரி:-

தி. ஞானசேகரன்
3-பி,  46ஆவது ஒழுங்கை
வெள்ளவத்தை
கொழும்பு – 06


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக